சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றன: மகிந்த ராஜபக்ஷ

mahintha_CIபாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை காரணம் காட்டி சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில நாடுகள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்விவகாரங்களில் தலையிடுகின்றன. இதனால் சில நாடுகள் அரசியல் ரீதியான ஸ்திரமற்ற நிலைமைக்கு தள்ளப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் அமைப்பு தொடர்ந்தும் நாடுகளுக்கு இடையில் ஒத்துழைப்புகளை அதிகரிக்க விரிவான கலந்துரையாடல்களை மேற்கொள்ள சர்வதேச மட்டத்திலான மேடையாக இருந்தது.

இலங்கை உலகத்தில் பயங்கரமான தீவிரவாத அமைப்பை தோற்கடித்தது மட்டுமல்லாமல் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலக உணவு, பொருளாதாரம் நெருக்கடி ஆகியவற்றை வெற்றிகரமான முறையில் எதிர்கொண்டது. அத்துடன் இலங்கை வெற்றிகரமான பொருளாதார இலக்கை அடைந்துள்ளது.

15 சத வீதமான இருந்த வறுமை நிலைமையை 5 வருட காலத்தில் இலங்கையால் 6 முதல் 5 வீதமாக குறைக்க முடிந்தது. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு சில தரப்பினரால் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுகின்றனர்.

நாடுகள் பல கலாசாரங்களை கொண்டுள்ளதுடன் வரலாற்று பின்னணிகளை கொண்டுள்ளன. இவற்றை பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சில நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதிக்கும் போது மீண்டும் ஒரு முறை சிந்தித்து பார்க்க வேண்டும். பொருளாதார தடைகள் காரணமாக அந்த நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுகின்றன. கியூபாவும் அவ்வாறு பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று.

போருக்கு பின்னர் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்து கௌரவம் கொள்ள முடியும். மக்களின் கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் எப்போதும் செவிமடுத்து வருகிறது. வடக்கு மக்களுக்கு இலங்கை அரசாங்கம் தேர்தல் ஒன்றை வழங்கியது.

வடபகுதி மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவுசெய்ய அவர்களுக்கு அண்மையில் சந்தர்ப்பம் கிடைத்தது. அரசியல் ரீதியாக மக்களை வலுப்படுத்தவும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை சம்பந்தமான சில நாடுகள் அசாதாரண போக்கு பல நாடுகளை அதிருப்தியடைய வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகளை சகலநாடுகளுக்கும் பொதுவானதாகவும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். பல்வேறு தரப்பினரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை செயற்படுத்தும் இடமாக ஐக்கிய நாடுகள் அமைப்பு இருக்கக்கூடாது என்றார்.

Related Posts