சிறையில் பிரியங்காவுடன் நடந்த சந்திப்பு தொடர்பில் நளினி..

பிரியங்காவை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதேன். பிரியங்கா என்னை சந்தித்த பிறகு தான் இலங்கையில் இறுதி கட்ட போர் தீவிரமடைந்ததாக கூறப்படுவது தவறு என்றும் தனது சுயசரிதை புத்தகத்தில் நளினி தெரிவித்துள்ளார்.

priyanka-and-nalini

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி “ராஜீவ் படுகொலை-மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்” என்ற தலைப்பில் சுயசரிதை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தைத் பத்திரிகையாளர் பா.ஏகலைவன் தொகுத்து உள்ளார். இந்த புத்தகம் சென்னையில் வெளியிடப்பட்டது.

அந்த புத்தகத்தில் நளினி கூறியிருப்பதாவது:-

இது கால் நூற்றாண்டைத் தாண்டி இருட்டறைக்கு உள்ளாக ஒலித்துக் கொண்டிருக்கும் என் மனசாட்சியின் குரல். இப்போது, சிறைக் கொட்டடியைத் தாண்டி உங்களின் இதயத்தைத் தட்டப்போகிறது. எனக்கான கனவுகளோடு அந்த வசந்தகால நடைபாதையில் எல்லோரையும் போல நானும் இளமையைச் சுமந்து கொண்டு காத்திருந்தேன். திடீரென ஒரு வெடிகுண்டுச் சத்தம், என் கனவுகளை எல்லாம் சிதைத்துவிட்டுப் போகும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.

இப்போது 26 ஆண்டு காலம், நீண்ட நெடிய சிறைவாசத்தை அனுபவித்தபடி நிற்கிறேன். இதில் பாதிக் காலம், ‘நாளை என் உடல் தூக்கில் தொங்குமோ’, என்ற மிரட்சியில் கழிந்தது. எப்போது விடுதலை கிடைக்கும் என்ற ஏக்கத்தில் என் கணவரையும், குழந்தையையும் பிரிந்த துயரில் கண்ணீரில், கவலையில் என் மீதி வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது.

அது, 19.3.2008 திங்கட்கிழமை. அதற்கு முன்பு சனிக்கிழமை தான் என் கணவர் வந்து வழக்கம்போல் என்னை சந்தித்து வீட்டு போயிருந்தார். இருவரும் மகள் பற்றிய விஷயத்தை பேசியிருந்தோம்.

அப்போது முற்பகல் 11 மணி இருக்கும். சிறை ஊழியர்களும், அதிகாரிகளும் இங்கும், அங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். வெளியில் இருந்த கைதிகள் அனைவரையும் உடனடியாக அவரவர் சிறை அறைக்குள் சென்று விடும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த பரபரப்பு ஒரு அசாதாரணமான சூழ்நிலையாகப்பட்டது.

நான் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததால் எனக்கு அந்த பிரச்சினை இல்லை. அதனால் விரட்டல்காரர்கள் என் பக்கம் வர வேண்டிய அவசியம் இல்லை. அப்போது எனது அறையில் ஒரு புதியவர். எனக்கு எதிரே கண்காணிப்பாளரின் நாற்காலியில் உட்கார்ந்திருந்த புதியவரின் பார்வை என் மீதே அம்புகளாய் குத்தியிருந்தது. எனக்கு இது மேலும் குழப்பத்தையும், பயத்தையும் ஏற்படுத்தியது. அவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்காகாந்தி என்பதை அறிந்ததும் எனது உடலில் ஜில்லென்ற உணர்வு, நாடி நரம்புகள் தளர்ந்து போய் விட்டது. அதிர்ச்சியில் நான் சிலை போல் நின்றதை பார்த்ததும் அவர் நான் பிரியங்காகாந்தி என்றார்.

உதடுகள் துடித்தபடி பட்டென்று என்னை நோக்கி ஏன் அப்படி செய்தீர்கள்? எங்க அப்பா மிக மென்மையானவராயிற்றே, நல்லவராயிற்றே, எதுவானாலும் பேசி தீர்த்துக்கொண்டிருக்கலாமே, ஏன் அப்படி செய்தீர்கள் என்றவர் கண்கள் குளமாகி அழ ஆரம்பித்து விட்டார்.

அந்த கண்ணீரை நான் எதிர்பார்க்கவில்லை. அந்த காட்சி என்னை நிலை குலைய வைத்தது. அய்யோ, மேடம் எனக்கு எதுவும் தெரியாது. நான் எறும்புக்கு கூட தீங்கு நினைக்க முடியாதவள். என் சந்தர்ப்ப சூழ்நிலை என்னை இப்படி குற்றவாளியாக நிறுத்தியிருக்கிறது. மனதளவில் யாருக்கும் தீங்கை நினைக்காதவள், பிளீஸ் என நானும் கதறி அழ ஆரம்பித்து விட்டேன்.

என் வலியை விட அவர் அழுவதை தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் அழுதபடி இருந்தார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் பட்டென்று உண்மையில், நான் குற்றவாளி தான் என நீங்கள் நம்பினால் இப்போதே உங்கள் முன்னாலே என் உயிரை விட்டு விடுகிறேன் அல்லது உங்கள் விருப்பம் போல உயிரை எடுத்துக்கொள்ளுங்கள். அதுவே எனக்கு அமைதியை தரட்டும் என்றேன்.

கண்களை துடைத்துக்கொண்ட பிரியங்கா சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார். அவரது அழுது சிவந்த கண்களையும், முகத்தையும் பார்க்க பார்க்க எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. யார்? யாருக்கு ஆறுதல் கூற முடியும்.

அவரது பார்வையில் நான் குற்றவாளி, என்னுடைய பார்வையில் அவர் பாதிக்கப்பட்ட அப்பாவி. அவ்வளவு தான். நான் நடந்த விவரங்களை தெரிவித்தேன். என் பக்கமும், என் கணவர் பக்கமும் உள்ள நியாயத்தையும் மற்றவர்கள் பற்றியும் கூறினேன்.

அப்போதுதான் அவர் முகம் மாறத்தொடங்கியது. அவர் பார்வையும் சிவந்து கொண்டிருந்த முகமும் அதை வெளிப்படுத்தியது. ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றையும் குறுக்கு கேள்வி மூலம் மறுத்தபடி அதிருப்தியை வெளிப்படுத்தினார். எதிர் கேள்வியால் மறுத்தபடி, “உன்னைப் பற்றி சொன்னாய்.. உன் கணவரைப் பற்றி சொன்னாய். அதில் ஒரு நியாயம் உண்டு. ‘அவர்களைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்…? அவர்களை பற்றி நீங்கள் ஏன் அக்கறை எடுத்துக் கொள்கிறீர்கள்?’ என சற்று காட்டமாக கேட்டார். அப்படியான அதிருப்தியையும் எதிர்ப்பையும் நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

‘இல்லைங்க மேடம். அவர்களும் அப்பாவிகள்தான்…’ என நான் சொல்ல முற்பட்டபோதே, ‘இதோ பாருங்கள். நீங்கள் அனைவருமே நிரபராதிகளா? உங்களில் யாருக்குமே இந்த சம்பவத்தில் தொடர்பில்லையா? அப்படி என்றால் இந்த விசாரணை, சி.பி.ஐ. சாட்சிகள், ஆவணங்கள் எல்லாமும் பொய்யா? நீதிமன்ற முடிவுகள் தவறானதா? என்ன சொல்ல வருகிறீர்கள்’ என கோபத்தின் உச்சிக்கு போனபோது எனக்கு நடுநடுங்கத் தொடங்கிவிட்டது.

அதற்கு மேலும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஸ்தம்பித்து நின்றேன். சி.பி.ஐ. ஜோடிப்புகள், தீர்ப்புகள் எல்லாமே தவறுதான் என்பதை எப்படி அவருக்கு புரியவைப்பது? அப்படிச் சொன்னால் அவர் குடும்பம் ஏமாற்றப்பட்டிருக்கிறது என்பதை அவரால் சகிப்பது மிக சிரமமாச்சே என்று அப்படியே பிரமை பிடித்து பார்த்திருந்தேன். மேற்கொண்டு பேச எனக்கு நா குழறியது.

எங்களின் சந்திப்பு தொடர்ந்து 75-லிருந்து 85 நிமிடங்கள் வரை இருந்தது. சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் இந்த சந்திப்பு நீண்டது. 50 நிமிடங்கள் வரை நான் சொன்ன விளக்கத்தை எல்லாம் உள்வாங்கிக்கொண்டே சின்ன சின்ன கேள்விகளை எழுப்பியிருந்தார். முகத்தில் அதிருப்தியும், வெறுப்புமாக இருந்தது. சமயத்தில் ஆச்சரியம், வியப்பு ஆகியவையும் வெளிப்பட்டன.

இந்த வழக்கின் விசாரணை ஒட்டுமொத்தமாக தவறு என்று நான் சொன்ன உண்மையை அவரது புண்பட்டிருந்த மனசு ஏற்க தயாராக இருக்கவில்லை. அந்த நிராகரிப்பு கோபமாக வெளிப்பட்டது. அந்த கோபம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்த நான் அமைதியானேன்.

அந்த சந்திப்பு பற்றிய செய்தி முதலில் வெளியானவுடன் சிறைத் துறை (மாநில அரசு) “அப்படிச் சந்திப்பு ஏதும் நடக்கவில்லை” என மறுத்தது. ஏன்..? பிரியங்கா “ஆமாம்…நடந்தது” என ஒப்புக் கொண்ட பின்னர்தான் உலகமே நம்பியது. அவரும் இல்லை என மறுத்து இருந்தால் அதனைத்தான் உலகம் நம்பி இருக்கும்.

ஏனெனில் அந்த சந்திப்பு நடந்ததற்கான பதிவு, ஆவணம், அனுமதி என எதுவுமே சான்றாக இல்லை. அவரது பெருந்தன்மையினையும் துணிச்சலையும் பாராட்டியாக வேண்டும். அவர் மறுத்து இருந்தால் என் மீது பழி சுமத்தி இருப்பார்களா? என் விடுதலைக்கு பெரும் முட்டுக்கட்டை போட்டிருப்பார்களா?

17 ஆண்டுகள் கழித்து என்னைத் தேடி வருவானேன் என்ற காரணமும் நோக்கமும் அரசியல் பின்னணி கொண்டதே. அப்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்தது. அதற்கு எங்கள் சந்திப்பை பயன்படுத்தத் திட்டமிட்டிருக்கலாம். இப்படி பல விஷயங்கள் இதனுள் அடங்கியிருப்பதாகவே நினைக்கின்றேன்.

இப்போது திரும்பிப் பார்க்கிறேன். அந்த சந்திப்பு நடந்து 9 ஆண்டுகள் கடந்து விட்டன. எங்களுக்கு நல்லது ஏதும் நடக்கவில்லை. ‘என்னோட காயத்தை ஆற்றிக்கொள்ள நடந்த சந்திப்பு என அறிக்கை கொடுத்திருந்தார்.

பிரியங்கா என்னை சந்தித்த பிறகு தான், நான் எதையோ சொல்லி விட்ட பிறகு தான் இலங்கையில் இன அழிப்பு போர் தீவிரமடைந்து கோரமாக முடிந்தது என்று விஷமத்தனமான பிரசாரத்தை இங்கே சிலர் செய்தார்கள். சிலர் உண்மையை அறியாமல் பேசினார்கள். சிலர் வேண்டும் என்றே பேசினார்கள். சிலர் எனது விடுதலைக்கான ஆதரவை முழுமையாக தடுத்து விட திட்டமிட்டு அந்த பழிகளை பரப்பினார்கள்.

2000-ம் ஆண்டு எங்கள் 4 பேரின் மரண தண்டனை உச்சத்தில் இருந்த நேரம். மரண தண்டனையை தடுத்து நிறுத்துவதற்காகவே பழ.நெடுமாறன், தோழர் தியாகு உள்ளிட்ட சிலர் டெல்லிக்கு சென்றார்கள். சோனியாவை சந்தித்தார்கள். அப்போது பல விஷயங்களை எடுத்து சொன்னார்கள். எங்களுக்கான தூக்குமரம் சற்று தூரம் தள்ளி போனது அவர்களின் முயற்சியால் தான். ஆக அப்போது எல்லாம் அந்த விஷமக்காரர்கள் பிரசாரம் செய்ய முடியவில்லை. ஆனால் பிரியங்கா என்னை சந்தித்தது மட்டும் அவர்களுக்கு தவறாக தோன்றியிருக்கிறது. போகட்டும். இவ்வாறு சுயசரிதையில் நளினி தெரிவித்துள்ளார்.

Related Posts