சிறைச்சாலைகளை மூடி பாடசாலைகளைத் திறக்க வேண்டும்

சிறைச்சாலைகளை மூடிவிட்டு பாடசாலைகளைத் திறக்கும் ஒரு நாடு உருவாகவேண்டுமென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் வைத்தியசாலைகள் குறைந்து சுகதேகியான மக்கள் அதிகமாக வாழும் நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமெனவும், கேகாலை புனித மரியாள் கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

உலகில் மனித சமூகத்தின் பயணத்திற்குத் தடையாகவுள்ள முக்கிய அம்சம் நல்ல மனிதர்களின் அமைதியும் வெற்று மனிதர்களின் கோஷமும் ஆகும் என்ற மாடின்லூதர்கிங்கின் கூற்றை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, வெற்று மனிதர்களின் கோஷங்களை குறைப்பதற்கு கல்விமான்கள் நாட்டில் அதிகமாக உருவாக வேண்டுமென வலியுறுத்தினார்.

கீர்த்திமிக்க வரலாற்றைக் கொண்டுள்ள கேகாலை புனித மரியாள் கல்லூரி நாட்டுக்கு சிறந்த பிரஜைகளை உருவாக்கித் தந்துள்ளதாகவும், திரிபீடகம், விவிலியம் மற்றும் குர்ஆனை அடிப்படையாகக்கொண்ட இக்கல்லூரி தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகும் எனவும் குறிப்பிட்டார்.

1867ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கேகாலை புனித மரியாள் கல்லூரி அப்போது நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட கத்தோலிக்க மிசனரிப் பாடசாலைகளில் ஐந்தாவது பாடசாலையாகும்.

அப்போது கத்தோலிக்க சமயப்பணியில் ஈடுபட்டிருந்த டொமிலயோ சிங்கொலனி திருத்தந்தை இக்கல்லூரியின் ஆரம்ப கர்த்தாவாகும். 22 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி மூலம் ஆங்கிலத்தில் கல்விகற்பதற்கு அக்காலத்தில் கத்தோலிக்க பிரபுக்களின் பிள்ளைகளுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது.

150ஆவது வருடத்தை நிறைவுசெய்திருக்கும் இக்கல்லூரி கத்தோலிக்க சமயத் தலைவர்களின் பின்னர் பல்வேறு அதிபர்களின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

கல்லூரியின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியையும் ஜனாதிபதி திறந்து வைத்தார்.

மாணவர்களின் ஆக்கங்கள் வைக்கப்பட்டிருந்த கண்காட்சிக் கூடங்களையும் ஜனாதிபதி பார்வையிட்டார். தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக தமது திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கிவைத்தார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சப்ரகமுவ மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா, முதலமைச்சர் மஹீபால ஹேரத், கல்லூயின் அதிபர் ஹேமா விக்கிரமரத்ன மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் பெருமளவில் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Posts