சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு வெளிநாட்டுப் பாணியில் தண்டனை! – அமைச்சர் சந்திராணி

சிறுவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த அதனை மேற்கொள்பவர்களுக்கு எதிரான தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார ஜனாதிபதியிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் வழங்கப்படும் கொடுமையான தண்டனைகளைப் போன்று நமது நாட்டிலும் தண்டனை கடுமையாக்கப்படும் பட்சத்தில் இவ்வாறான செயல்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சியில் நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் வீடுகளிலிருந்தே ஆரம்பிக்கப்படுகின்றது எனவும் தொழிலுக்கு செல்லும் பொற்றோர்கள் தமது பிள்ளைகளை வீட்டிலுள்ள பெரியவர்களிடமோ அல்லது வேலையாட்களிடமோ விட்டுச் செல்வதன் காரணமாகவே இந்த நிலை ஏற்படுகின்றது எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இவ்வாறான செயல்களை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 2020ஆம் ஆண்டிற்குள் 20000 சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார்.

Related Posts