சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது தடுக்கப்படல் வேண்டும் – சூசையானந்தன்

சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவது சட்டபூர்வமாக தடுக்கப்பட வேண்டும் என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் திங்கட்கிழமை (01) தெரிவித்தார்.

சிறுவர் தொழிலாளர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சிறுவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கடற்றொழில் மிகவும் கடினமான ஒரு தொழில். சிறுவர்கள் கல்வி கற்பதற்கான முழு ஏற்பாடுகளையும் மீனவ சங்கங்கள், பாடசாலைகள், கோவில்கள், பெற்றோர் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். அவர்களுக்கு எழுத வாசிக்க தெரியும் வரையாவது கல்வி கற்பிக்க வேண்டும்.

சிறுவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபடுவது இல்லை. ஆனாலும் இலங்கையில் மீன்பிடி சார்ந்த சிறிய சிறிய வேலைகளையே செய்கிறார்கள் என்று கூறலாம்.

சிறிய அளவில் மேற்கொள்ளும் அந்த வேலைகளையும் அவர்களது 15 வயது வரை மேற்கொள்ள விடக்கூடாது. சிறுவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுக்கின்றமை தொடர்பில் தெளிவான சட்டம் எதுவும் இலங்கை யாப்பில் இல்லை.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்படும் இந்திய மீனவர்களில், சிறுவர்களும் உள்ளடங்குவது கவலை தருவதாகவுள்ளது. இதற்கு இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அந்த சிறுவர்களுக்கு கட்டாயக்கல்வி வழங்கப்பட வேண்டும். கடினமான மீன்பிடி வேலையில் இந்திய சிறுவர்களை ஈடுபடுத்தக்கூடாது.

இந்த செயற்பாட்டுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts