சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜனாதிபதி

வீட்டிலும் பாடசாலைகளிலும் சிறுவர்கள் பாதிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை பாதுகாப்போம் நிகழ்ச்சித் திட்டமானது நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி, மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் ”இந்த வேலைத்திட்டத்தில் கலந்து கொண்டமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சிறுவர்களது தமது வீட்டில் தான் அதிகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.

அவர்களது வீட்டின் பொருளாதார நிலைமை, பெற்றோரின் மதுப்பாவனை, பெற்றோரினால் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்றும் அழுத்தங்கள் ஊடாக சிறுவர்கள் பாரிய சிக்கல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

இன்னும் சிலர் பிள்ளைகளை துஸ்பிரயோகம் செய்வதை ஊடகங்கள் வாயிலாக தெரிந்துக்கொள்ளக்கூடடியதாக இருக்கிறது. உண்மையில், இவை மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மேலும், பாடசாலைகளில் சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், விசேட தேவையுடைய சிறுவர்களின் பிரச்சினைகள், வேலைக்காக பெற்றோர் வெளிநாடு சென்றதையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிறார்கள் தொடர்பிலும் நாம் அதிக கவணம் செலுத்த வேண்டியுள்ளது.

இவற்றை தடுக்க நாம் உரிய நடவடிக்கைகளை எடுத்தே ஆகவேண்டும் என்பதற்காகத் தான் ஜனாதிபதி செயலகத்தினால் சிறுவர்களை பாதுகாப்போம் எனும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தை தற்போது நாம் ஆரம்பித்துள்ளோம்.

இதற்காக நாடளாவிய ரீதியாக பல்வேறு தரப்பினரையும் நாம் இணைத்துக்கொண்டுள்ளோம். சிறுவர்களை பாதுகாப்பதும், அவர்களுக்கான கல்வி, சுகாதாரத்தை உறுதிப்படுத்தி அவர்களின் எதிர்க்காலத்தை சிறப்பாக மாற்றுவதே எமது இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்” என தெரிவித்துள்ளார்.

Related Posts