Ad Widget

சிறுமி பாலியல் வன்புணர்வு சம்பவம், சமூகத்தை அச்சுறுத்தும் பாரதூரமான குற்றம் – யாழ். நீதவான்

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம் என்றும் அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம் என்றும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு சந்தேகநபரின் பிணை மனுவையையும் நிராகரித்த நீதவான் குறித்த நபரின் விளக்கமறியலையும் நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

கொக்குவில் பகுதியில் பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்தினார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இதனை அடுத்து சந்தேகநபர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) வான் ஒன்றில் சென்று கொண்டிருந்த போது கைது செய்ததுடன் அவரது வானையும் கைப்பற்றினர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவருக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்திய குற்றச்சாட்டின் கீழான முதல் அறிக்கையின் கீழ் முற்படுத்தப்பட்டார்.

சந்தேகநபர் சார்பில் மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா முன்னிலையானார். சந்தேகநபர் சார்பில் அவர் பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

“சந்தேகநபருக்கும் இந்தக் குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை. அவர் சிறுமியை தாயாரின் அனுமதியுடனேயே 3 தடவைகள் வெளியில் அழைத்துச் சென்றார். அதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்தா மன்றுரைத்தார்.

சந்தேநபர் சார்பான பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், “பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவது பாரதூரமான குற்றம். அது சமூகத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் சம்பவம்.

அத்துடன், சந்தேகநபருக்கு எதிரான குற்றச்சாட்டுத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தவில்லை. அதனால் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது” என்று சுட்டிக்காட்டி சந்தேநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts