கிளிநொச்சி உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் ஜெரோசா (வயது 03) என்ற சிறுமியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனான 14 வயதுச் சிறுவனை 14 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன், கிளிநொச்சி பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.
சிறுவனை பொலிஸார் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (27) ஆஜர்ப்படுத்தி விசாரணை செய்வதற்கான அனுமதியை பொலிஸார் கோரியபோதே நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.
கிளிநொச்சியில் கடந்த ஜூன் மாதம் 21 ஆம் திகதி மாலை 4 மணியிலிருந்து காணாமற்போன உருத்திரபுரம், எள்ளுக்காடு, சத்தியபுரம் கிராமத்தைச் சேர்ந்த சந்திரகுமார் யர்ஷிகா (வயது 03) என்ற சிறுமி, காணாமற்போன இடத்திலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பொறிக்கடவை என்னுமிடத்தில் உள்ள வயல் வெளியிலிருந்து கடந்த 19 ஆம் திகதி உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
சடலத்துடன் சிறுமி காணாமற்போகும் போது அணிந்திருந்த ஆடைகள், காலணி, என்பன மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட வைத்திய நிபுணர் குழுவால் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ,தன்போது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, சிறுமி காணாமற்போன அன்று, சிறுமியை வாய்க்கால் வரையில் கொண்டு சென்று விட்ட சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரனைக் கடந்த 23 ஆம் திகதி கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் தடுத்து விசாரணை செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.