மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்டதற்காக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியதோடு, அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படமாகவும் எடுத்துள்ளார்.
இவற்றினை அவதானித்த சிலர் குறித்த நபரின் தொலைபேசியை பறித்ததும், அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் தொடர்பில், சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.