தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார்.
“கொலை வழக்குகளின் சந்தேகநபர்களுக்கே நீதிமன்றால் பிணை வழங்கப்படுகிறது. இத்தகைய சாதாரண சந்தேகநபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்று மறுக்கலாமா? வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் உப அதிபர் ஒருவரும் ஆசிரியை ஒருவருமே இந்த விடயத்தை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்குத் தெரியப்படுத்தி பூதாகரமாக்கினர்” என்று அவர் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி என்.சிறிகாந்த நீண்ட விரிவான சமர்ப்பணத்தை மன்றில் முன்வைத்தார்.
சந்தேகநபர் சார்பான சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று பிணை விண்ணப்பத்தை நிராகரித்து சந்தேகநபரின் விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டது.
இதேவேளை, சந்தேகநபரை பிணையில் எடுப்பதற்கான தயார்படுத்தலை ஒரு வாரத்துக்கு முன்பாக அவரது தரப்பு முன்னெடுத்தது. சந்தேகநபரை நீதிமன்று இன்று பிணையில் விடுவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஆள் பிணையாளிகள் இருவரின் வதிவிடத்தை உறுதிப்படுத்திய ஆவணங்கள் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலரிடம் கடந்த வாரம் கையொப்பம் பெறப்பட்டுள்ளன.
பின்னணி
வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.
அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த 13ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.