சிறுமிகள் துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியரின் மறியல் நீடிப்பு

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரின் விளக்கமறியலை வரும் 14 நாள்களுக்கு நீடித்து மல்லாகம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா இன்று உத்தரவிட்டார்.

“ஆசிரியர், கௌரவமான குடும்பத்தில் பிறந்து வளந்தவர். கௌளரவமாக மணம் முடித்து, பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் குடும்பத்தை பார்க்குமளவுக்கு உழைக்கிறார். ஆசிரியர் மீது சேறு பூசும் நடவடிக்கையாகவே இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது” என்று அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் மன்றில் சமர்ப்பணம் செய்தார்.

“திருமணம் முடித்தவர்கள் இவ்வாறான செயற்பாட்டை செய்யமாட்டார்களா. முடிக்காதவர்கள்தான் செய்வார்களா? என்று கேள்வி எழுப்பிய மன்று, சந்தேகநபரின் விளக்கமறியலை 14 நாள்களுக்கு நீடித்து உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த 13ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைகளின் பின்னர் அவர், மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஆசிரியர் இன்று மன்றில் முற்படுத்தப்பட்டார். அதன்போதே அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

Related Posts