சிறுமிகளுக்கு துன்புறுத்தல்: வட்டுக்கோட்டை ஆசிரியருக்கு 3 மாதங்களின் பின் பிணை!

தனியார் கல்வி நிலையத்துக்கு வந்த பதின்ம வயது சிறுமிகள் மூவருக்கு பாலியல் தொல்லை வழங்கிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 3 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆசிரியரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்தது.

சந்தேகநபர் கடந்த வியாழக்கிழமை மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் முற்படுத்தப்பட்டார்.

“ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் சில சிறுமிகளின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன. அந்தச் சிறுமிகளிடம் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வாக்குமூலத்தைப் பெறும் வரை ஆசிரியருக்குப் பிணை வழங்கப்படக் கூடாது” என்று பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி எஸ்.சோபிதன் கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.

“சந்தேகநபருக்கு எதிரான சாட்சிகளான இரண்டு சிறுமிகளின் முழுமையான வாக்குமூலம் பெறப்பட்டுள்ளன. அவரைப் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபனையில்லை” என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் மன்றுரைத்தனர்.

அத்துடன், சிறுவர் பாதுகாப்பு அதிகாரியும் பிணை வழங்குவதற்கு ஆட்சேபனையில்லை என்று மன்றுரைத்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பான சட்டத்தரணியின் ஆட்சேபனை மற்றும் வழக்குத் தொடுனரான பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த மன்று, சந்தேகநபரை நிபந்தனையுடனான பிணையில் விடுவித்துக் கட்டளை வழங்கியது.

தலா 5 லட்சம் ரூபா பெறுமதியான ஆள் பிணை மற்றும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையில் சந்தேகநபரை விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னணி

வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் கல்வி நிலையத்தில் கற்பிக்கும் ஆசிரியர், அவரிடம் கற்கச் செல்லும் பதின்ம வயது மாணவிகள் சிலரை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்படுகின்றார் என சங்கானை பிரதேச சிறுவர் பாதுகாப்பு அலுவலகருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டன.

அவர் தனக்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்ய மாணவிகளின் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை. அதனால் சிறுவர் அலுவலகருடன் பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசாரணையில் மாணவிகள் மூவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.

அவற்றை அடிப்படையாக வைத்து பதின்ம வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை வழங்கினார் என்ற குற்றச்சாட்டில் ஆசிரியர் கடந்த ஜூன் 13ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

Related Posts