“சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை”
இவ்வாறு சிறுப்பிட்டி இளைஞர்களைக் கடத்திக் கொலை செய்யப்பட்ட இராணுவத்துக்கு எதிரான வழக்கில் பெண் ஒருவர் சாட்சியமளித்தார்.
யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது. இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.
வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள 14 சாட்சியங்களில் 7 சிவில் சாட்சிகளிடம் நேற்று மன்றினால் சாட்சியம் பெறப்பட்டது. சாட்சியமளித்த பெண் ஒருவரே இந்த விடயங்களை மன்றிடம் கூறினார்.
“இளைஞர்கள் இருவரும் சைக்கிளில் பயணித்த வேளை வழிமறித்த இராணுவத்தினர் அவர்களை சிறுப்பிட்டி படை முகாமுக்குள் அழைத்துச் சென்றனர். அதனை முகாமுக்கு அண்மையில் நின்று அவதானித்தேன். சிறிது நேரம் அங்கு என்ன நடக்கின்றது என அவதானித்தேன். எனினும் அந்த இளைஞர்கள் இருவரும் முகாமுக்குள் இருந்து வெளியே வரவில்லை” என்று அந்தப் பெண் சாட்சியமளித்தார்.
நேற்று 7 சாட்சியங்கள் பதியப்பட்டதுடன் மீதி சிவில் மற்றும் பொலிஸ் சாட்சியங்களை வரும் ஜூலை 15ஆம் திகதி பதியப்படும் என மன்று கட்டளையிட்டது.
பின்னணி
1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்தனர்.
எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரினால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார் கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்.
அத்துடன் இளைஞர்களின் துவிச்சக்கர வண்டிகளின் பாகங்களையும் இராணுவப் பொலிஸார் மீட்டிருந்தனர். அந்தச் சான்றுப் பொருள்கள் தற்போது இந்த வழக்குடன் சேர்க்கப்பட்டுள்ளன.