சிறுப்பிட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இராணுவத்தினரில் 9 பேரின் விளக்கமறியல் யாழ். நீதவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 28 ஆம் திகதி இரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்தனர். எனினும் 1998 ஆம் ஆண்டு நீதவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு கடந்த வருடம் சட்டமா அதிபரினால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் யுத்தத்தில் உயிரிழந்தனர். இந்நிலையில் வழக்கு விசாரணை யாழ். நீதவான் சதீஸ்கரனின் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த 14 இராணுவத்தினரினதும் பிணை நிராகரிக்கப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்படும் இராணுவ வீரர்களுக்கு பிணை வழங்கக்கோரி யாழ். மேல் நீதிமன்றில் பிணை மனு விண்ணப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் நீதிபதி இளஞ்செழியன் 1 ஆம் ,2 ஆம் 3 ஆம் 4 ஆம் 13 ஆம் 14 ஆம் எதிரிகளுக்கு பிணை வழங்கினார். 5 ஆம் 6 ஆம்7 ஆம் 8 ஆம் 9ஆம் 10 ஆம் 11 ஆம் 12 ஆம் 15 ஆம் எதிரிகள் பிணை நிராகரிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலி்ல் வைக்கப்பட்டனர்..
குறித்த வழக்கு நேற்று யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் சதீஸ்குமார் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மன்றில் சந்தேக நபர்களான 14 இாணுவ வீரர்களும் ஆஜராகியிருந்தனர்.
வழக்கை விசாரித்த நீதவான் 5 ஆம் 6 ஆம்7 ஆம் 8 ஆம் 9ஆம் 10 ஆம் 11 ஆம் 12 ஆம் 15 ஆம் எதிரிகளின் விளக்கமறியலை மேலும் 14 நாட்கள் நீடித்ததுடன் வழக்கை இம் மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.