இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
இதன்போது உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கடந்த காலத்தில் இடம்பெற்ற விரும்பத்தகாத செயல்முறைகள் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருக்க வேண்டுமாயின் இந்த நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது கட்டாயமானதாகும் எனத் தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் அனைத்து மக்களுக்களுடனும் நியாயமான முறையில் நடந்து கொள்ளும்.
மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தோற்றமெடுப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
கடந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைகளை செயற்படுத்தாமை காரணமாகவே நாடு சர்வதேச ரீதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது.
அதேபோல் முன்னாள் பிரதம நீதியரசரை பதவி விலக்கியமை மூலம் நீதித் துறையின் சுயாதீனத் தன்மை முழுமையாக தகர்த்தெரியப்பட்டது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தினால் இலங்கை தொடர்பாக தற்போது வௌியிடப்பட்டுள்ள அறிக்கை கடந்த மார்ச் மாதம் வௌியிடப்படவிருந்த நிலையில் நாம் அதனை செப்டம்பர் வரை பிற்போட்டோம்.
அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் சர்வதேசத்துடனும் ஐக்கிய நாடுகள் சபையுடனும் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தினோம்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் மீண்டும் நாட்டில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு நிர்வாக ரீதியாகவும் மற்றும் நீதித்துறையிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தென்னாபிரிக்காவின் அதிகாரிகளின் ஆலேசனையின் கீழ் நீதியையும் சமரசத்தையும் ஏற்படுத்துவதற்கான ஆணையகம் ஒன்று உருவாக்கப்படும்.
அதேபோல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகளுடன் இணைந்து இலங்கைக்கு சாதகமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது தொடர்பாக நாம் பாராளுமன்றிற்கு அறியத் தருகின்றோம்.
அதேபோல் காணாமல் போனோரை கண்டறிவதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்பட இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.