சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிராக யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்

சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஜெனீவாப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் நகரில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டது.சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் தலைமையில் ஜெனீவா மனித உரிமைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது துரையப்பா விளையாட்டு அரங்கில் இருந்து ஆரம்பித்து யாழ். மத்திய பேரூந்து நிலையத்தை வந்தடைந்தது.

பல்வேறு வாசகங்களைத் தாங்கியும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.பெருமளவான மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதற்கென யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வடமராட்சி, தென்மராட்சி, தீவகம், வலிகாமம் உட்பட நாடளாவிய ரீதியிலும் இருந்தும் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதற்கான பயண ஒழுங்குகளும் அந்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் இருந்தும் பல்வேறு காரணங்களைக் கூறி மக்கள் பலவந்தமாகவும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கு மக்கள் அழைத்துவரப்பட்டிருந்தனர்.இதை விட நேற்று இரவு தென்மராட்சிப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் பலரிடம் காரணம் கூறாது அவர்களை வழிமறித்து அடையாள அட்டைகளை பெற்றுக் கொண்டுள்ளனர். அத்துடன் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ள குறிக்கப்பட்ட தமது முகாம்களுக்கு வருமாறும் கூறியுள்ளனர்.

அவர்களும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததனைக் காணக்கூடியதாக இருந்தது. அதை விட முன்னாள் போராளிகள் அனைவரும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.உதவி வழங்கல் மற்றும் கூட்டம் என்ற போர்வையிலான காரணங்களைக் காட்டி அழைக்கப்பட்ட பெருமளவிலான மக்களே யாழ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்ததைக் காண முடிந்தது.

இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டிருந்தனர். அத்துடன் தமக்கு ஏதாவது விமோசனம் கிடைக்கும் என்ற ஆதங்கத்தில் பல தாய்மார்கள் தமது பச்சிளம் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வந்துள்ளனர்.தமிழ் மக்களும் ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர் என சர்வதேசத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காகவே சுதந்திரக் கட்சி இவ்வாறு உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் காட்டி மக்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது என அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் தம்மிடையே பேசிக் கொண்டிருந்தனர்.

Related Posts