புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளின் அடுத்தகட்டமாக இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைச் சந்தித்து, அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைக்கான திகதியை நிர்ணயிப்பதற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உத்தேசித்திருக்கிறார்.
பொதுத்தேர்தல் முடிவுகளை அடுத்து எதிர்வருங்காலத்தில் அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படும்போது, குறைந்தபட்சம் அவ்விடயத்தில் மாத்திரமேனும் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை அண்மையில் வெளிப்படுத்தியிருந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதனை முன்னிறுத்தி இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரைக் கடந்த மாதம் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.
அதேவேளை இந்த ஒற்றுமை முயற்சி தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு என்னவென்பது குறித்து தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் கொள்கை ரீதியில் பொதுநிலைப்பாடொன்றுக்கு வரவேண்டியது அவசியம் எனவும், தற்போதைய சூழ்நிலையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடாமல் தமிழர்களுக்கு வரலாறு இல்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதேபோன்று புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒருமித்த பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவதாகக் குறிப்பிட்டிருந்த ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் ஆரம்பிக்கப்படும்போது சகல தமிழ்த்தேசியக்கட்சிகளும் கூட்டிணைந்து புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொதுவான தீர்வுத்திட்டமொன்றை சமர்ப்பிக்கவேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் இதன் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று செவ்வாய்க்கிழமை (7) பாராளுமன்றத்தில் சிறிதரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு உத்தேசித்திருக்கிறார்.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கான பொதுவான திகதியொன்றை நிர்ணயிப்பதற்கும் அவர் எதிர்பார்த்திருக்கிறார்.