சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளரான ஆர்.சிவராஜா இலங்கை இராஜதந்திர சேவையில் ஓர் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
ஜேர்மனின் தலைநகர் பேர்ளினில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் ஊடக அதிகாரியாக அவர் தமது பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த நியமனத்துக்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது. தற்போது அவர் ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராகப் பணியாற்றி வருகின்றார்.
1996 ஆம் ஆண்டு ‘வீரகேசரி’ பத்திரிகையில் செய்தியாளராக இணைந்த ஆர்.சிவராஜா, பின்னர் மகாராஜா நிறுவனத்தின் ‘சக்தி’ தொலைக்காட்சி, ‘தினக்குரல்’ பத்திரிகை நிறுவனங்களின் அரசியல் செய்தியாளராகக் கடமையாற்றினார்.
2004 ஆம் ஆண்டு ‘சுடர்ஒளி’ பத்திரிகையில் சிரேஷ்ட செய்தியாளராக நியமனம் பெற்ற அவர், 2011 ஆம் ஆண்டு அப்பத்திரிகையின் ஆசிரியரானார். பின்னர் கடந்த ஆண்டு ஜனாதிபதியின் தமிழ் விவகாரங்கள் மற்றும் தமிழ் ஊடகங்களுக்கான இணைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.