‘கத்தி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும், பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். பி.டி.செல்வக்குமார் இப்படத்தை மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கிறார்.
இந்நிலையில், படத்தை பற்றிய சுவாரஸ்மான செய்தி ஒன்று தற்போது வெளிவந்திருக்கிறது. ‘கத்தி’ படத்தை தொடர்ந்து விஜய் இப்படத்திலும் இரட்டை வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய். அப்பா வேடத்திற்கு ஜோடியாக ஸ்ரீதேவியும், மகன் வேடத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும் நடிக்கவிருக்கிறார்களாம்.
தற்போது இப்படத்திற்காக சென்னை ஈசிஆர் ரோட்டில் பிரம்மாண்ட அரண்மனை செட் ஒன்று போடப்பட்டு வருகிறதாம். மேலும், படத்திற்கு ‘மாரீசன்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இப்படம் முடிந்த கையோடு விஜய், அட்லி இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை ‘விஜய் டிவி’ மகேந்திரன், ஆடிட்டர் சண்முகம் இவர்களோடு இணைந்து கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து ‘சுப்ரமணியபுரம்’ படத்தை இயக்கிய இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இயக்கும் முழு ஆக்ஷன் படமொன்றிலும் விஜய் நடிக்கவிருக்கிறாராம்.