இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர், சென்னையில் இன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னையின் எஃப்சி – அட்லெடிகோ டி கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துத் தொடர் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை தொடங்குகிறது.
வரும் டிசம்பர் 20ம் தேதி வரை மொத்தம் 61 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இன்று, இரவு 7 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் உள்ளூர் அணியான சென்னையின் எஃப்சியும், நடப்புச் சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும் மோதுகின்றன.
சென்னையின் எஃப்சி அணியைப் பொருத்த வரை, கடந்த ஆண்டில் காணப்பட்ட குறைகளை கவனித்து அணியில் சில மாற்றங்களை செய்துள்ளது.
பிரேசில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து சில வலுவான வீரர்களை விளையாட அழைத்து வந்துள்ளது. கடந்த முறை சிறப்பாக விளையாடிய வீரர்களையும் சென்னை அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் தொடரில் 9 கோல்கள் அடித்து தங்க “ஷூ’ வென்ற நட்சத்திர நடுக்கள வீரர் இலானோ புளூமர் (பிரேசில்), இந்த முறையும் சென்னையின் எஃப்சிக்காக ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளார்.
மைக்கேல் சில்வெஸ்ட்ரி, எரிக் ஜெம்பா ஆகியோருக்குப் பதிலாக இத்தாலியின் நடுக்கள வீரர்கள் மேனுலி பிளாசி, தடுப்பாட்டக்காரர் அலெஸாண்ட்ரோ போடென்ஸா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர, பிரேசில் நடுக்கள வீரர் ரஃபேல் அகஸ்டோ, தடுப்பாட்டக்காரர்கள் ஈடர் மாண்ட்டெய்ரோ, மெய்ல்சன் ஆல்வ்ஸ் ஆகியோர் சென்னை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எத்தியோப்பிய முன்கள வீரர் ஃபிக்ரு, கேமரூன் கோல் கீப்பர் அபௌலா எடிமா ஆகியோர் கொல்த்தா அணியிலிருந்து சென்னை அணிக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
கொல்கத்தா அணியும், இந்த முறை தங்கள் அணியில் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. ஃபிக்ரு, லூயிஸ் கார்சியா மற்றும் ஜோஃப்ரி மேட் போன்ற முக்கிய வீரர்களை விடுவித்துவிட்டது.
கடந்த சீசனில் சிறந்த வீரருக்கான விருது பெற்ற எய்ன் ஹூயூமி (கனடா), இந்த முறை கொல்கத்தா அணியில் இணைந்துள்ளார்.
இன்று மாலை 5 மணிக்கு சினிமா நட்சத்திரங்களின் நடனங்களுடன் இந்தியன் சூப்பர் லீக் தொடக்க விழா நிகழ்ச்சிகள் அரங்கேறுகிறது. இப்போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜெயா மேக்ஸ் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.