சினிமாவில் ராசி : நயன்தாராவும் பீர்பாட்டிலும்

தமிழ் பட உலகினர் மத்தியில் ராசி பார்க்கும் பழக்கம் ரொம்ப காலத்துக்கு முன்பிருந்தே இருக்கிறது. எம்.ஜி.ஆரை வைத்து தேவர் தயாரித்த படங்களில் முதல் காட்சியாக வெற்றி, வெற்றி என்ற வசனம் இடம்பெறும். மறைந்த நடிகர் பாலாஜி தயாரித்த படங்களில் கதாநாயகன் பெயர் ராஜா, கதாநாயகி பெயர் ராதா என்று இருக்கும் அந்த பெயர்களை அவர் ராசியாக கருதினார்.

nayanthara-1

அதுபோல் ராஜா பெயரில் சிவாஜிகணேசன் நடித்த பல படங்கள் வசூல் குவித்துள்ளன. ரஜினிகாந்த் படங்களில் பாம்பு ராசியாக இருந்தது. பாம்பு இடம் பெற்ற ‘தம்பிக்கு எந்த ஊரு, முத்து, அண்ணாலை, சந்திரமுகி, படையப்பா, எந்திரன்’ உள்ளிட்ட படங்கள் வசூலில் சக்கைப்போடு போட்டன. எனவே அவரது படங்களில் ஏதேனும் ஒரு காட்சியில் நிஜமாகவோ, கிராபிக்சிலோ பாம்பு வருவது போன்று டைரக்டர்கள் காட்சி வைத்தனர்.

இதுபோல் பாக்யராஜ் ‘தூறல் நின்னுபோச்சு, சுவர் இல்லாத சித்திரங்கள், அந்த 7 நாட்கள், மவுன கீதங்கள்’ என்று எதிர்மறையாக தலைப்பு வைப்பதை அதிர்ஷ்டமாக பார்த்தார். மோகனுக்கு மைக் ராசியாக இருந்தது. சிவாஜி கணேசன் தனது படங்களின் முதல் காட்சியை தன்னுடைய வீட்டில் படமாக்குவதை ராசியாக வைத்து இருந்தார்.

ரெயில் காட்சி இருக்கும் படங்கள் வெற்றி பெறும் என்ற நினைப்பும் திரையுலகினரை ஆட்டிப்படைத்தது. அதுபோல் ரெயில் சீன்கள் இருந்த ‘ஒரு தலை ராகம், கிழக்கே போகும் ரெயில், இதயம், முரட்டுக்காளை, ரெயில் பயணங்களில், மும்பை, மவுன ராகம், காதல் கோட்டை, அலைபாயுதே’ போன்ற படங்கள் வசூல் குவித்தன. விஜய், அஜித்குமார் படங்களில் சிவா என்று பெயர் வைப்பது ராசி என்றனர். ‘குஷி, வாலி’ படங்களில் இந்த பெயர்கள் இருந்தன. டைரக்டர் விக்ரமன் கோவிலில் முதல் காட்சியை படமாக்குவதை அதிர்ஷ்டமாக கருதினார்.

அத்தகைய ராசி பார்க்கும் பழக்கம் இப்போது நயன்தாரவையும் பிடித்து ஆட்டுகிறது. இவருக்கு பீர்பாட்டில் ராசி என்கின்றனர். தனுசுடன் ‘யாரடி நீ மோகினி’ படத்தில் மது குடிப்பது போல் நடித்தார். அந்த படம் வெற்றிபெற்றது. இதையடுத்து ஆர்யாவுடன் நடித்த ‘ராஜா ராணி’ படத்தில் நயன்தாரா கையில் பீர்பாட்டில் கொடுத்து காட்சி எடுத்தனர். அந்த படமும் வசூல் அள்ளியது.

இதனால் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ‘டாஸ்மாக்’ கடைக்கு சென்று நயன்தாரா பீர்பாட்டில் வாங்கி வருவது போன்ற ஒரு காட்சியை வைத்தனர். இந்த காட்சியில் நடித்ததற்காக அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. பெண்களுக்கு குடிப்பழக்கத்தை அவர் தூண்டுகிறார் என்றும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால் எதிர்ப்புகளை மீறி ‘நானும் ரவுடிதான்’ படம் சமீபத்தில் வெளியாகி பெரிய லாபம் பார்த்தது.

இப்போது ‘திருநாள்’ என்ற படத்தில் ஜீவா ஜோடியாக நயன்தாரா நடித்துக்கொண்டு இருக்கிறார். இந்த படத்திலும் ராசிக்காக நயன்தாரா கையில் பீர் பாட்டிலுடன் இருப்பது போன்ற காட்சியை படமாக்கி உள்ளனர். இந்த படங்கள் இணையதளங்களில் தற்போது பரவி வருகின்றன. இதற்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறது. நயன்தாரா பீர் பாட்டிலுடன் நடிக்கும் காட்சிகளை தவிர்க்கவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளனர்.

Related Posts