சினிமாவில் மீண்டும் சூர்யா-ஜோதிகா ஜோடி!

இது நம்ம ஆளு” படத்தைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கவுள்ள படத்தில் நாயகன், நாயகியாக நடிக்க இருக்கிறார்கள் சூர்யா – ஜோதிகா நட்சத்திர தம்பதியர்.

surya-jyothika

சிம்பு, நயன்தாரா, சூரி மற்றும் பலர் நடித்து வரும் ‘இது நம்ம ஆளு’ படத்தை இயக்கி வருகிறார் பாண்டிராஜ்.

தனது தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகும் இப்படத்தை, சிம்புவே தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில், ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளிவரவுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கவுள்ள படம் குறித்து பல்வேறு செய்திகள் வலம்வந்து கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் தரப்பிடம் விசாரித்தபோது,

‘இது நம்ம ஆளு” படத்தைத் தொடர்ந்து ‘பசங்க” பாணியில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார் பாண்டிராஜ். இதை நடிகர் சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டர்டெயிண்மென்ட்” மூலம் தயாரிக்க இருக்கிறார்.

இப்படத்தில் நடிக்கவிருக்கும் குழந்தைகள் தேர்வு அனைத்தும் முடிந்துவிட்டது. இப்படத்தில் குழந்தைகளுக்கு அப்பா – அம்மாவாக சூர்யா, ஜோதிகா இருவருமே நடிக்க இருக்கிறார்கள். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா தயாரிக்கும் முதல் படமாக அமையவுள்ளது இப்படம்.

‘இது நம்ம ஆளு” படம் வெளியாகும் முன்பே இப்படத்தின் பணிகள் தொடங்கவுள்ளன. சூர்யா நடிக்கவுள்ள இயக்குநர் வெங்கட்பிரபுவின் படத்தின் படப்பிடிப்பிற்கு முன்பே இப்படத்தின் பணிகள் ஆரம்பிக்கவுள்ளன. விரைவில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது” என்றார்கள்.

Related Posts