பாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த ‘ஜாஸ்பா’ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது….
கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் விளம்பரபடம், திரை உலகம் தொடர்பான பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நான் ஒரு போதும் சினிமாவை விட்டு விலகவில்லை. விலகவும் மாட்டேன். நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது கூட நடித்தேன்.
நான் சோம்பலாக இருந்தது இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் பிசியாக இருப்பேன். நான் ஒரு குழந்தைக்கு தாய். எனவே சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் சமமாக பயணிக்கிறேன். என் மகள் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்த போது என் மகளையும் உடன் அழைத்து செல்வேன். இப்போது சினிமா சூட்டிங்குக்கு போகும்போது மகள் ஆராத்யாவிடம் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு செல்கிறேன்.
கடந்த 5 ஆண்டுகளில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தாய்மை என்ற பெருமையை என் குழந்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். நான் கேட்ட பல கதைகளில் ‘ஜாஸ்பா’ நன்றாக பிடித்து இருந்தது. வித்தியாசமாக இருந்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன்.
குற்றவாளிகள் சிலர் ஒரு குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு வேறு சில குற்றவாளிகளை விடுவிக்க சொல்வது கதை. நான் வக்கீலாக நடிக்கிறேன். நான் ஒரு குழந்தைக்கு அம்மா. எனவே இந்த படம் சுலபமாக இருந்தது. முன்பு நான் நடித்ததற்கும் இந்த படத்தில் நடித்ததற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.
மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இப்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை தேடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது எனக்கு கிடைத்த பெருமை. எனது அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.