சபையை கட்டுப்படுத்த வேண்டியது அக்கிராசனத்தின் பொறுப்பு. ஆளும் கட்சியின் பிரதம கொறடாவே! உங்களுடைய உறுப்பினர்களை கட்டுப்படுத்தவும் இடையூறுகளை தாங்க முடியவில்லை. சினம் பிடித்த நாய்கள் கூக்குரல் இடுகின்றன என்று சுட்டிக்காட்டிய கூட்டமைப்பின் எம்.பி.யான சுமந்திரன், கோமாளியை சபையை விட்டு வெளியேற்றவும் என்றும் கோரி நின்றார்.பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு மீதான விவாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான சுமந்திரன் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில் ஆளும் தரப்பினர் கடுமையாக இடைஞ்சல்களை ஏற்படுத்தினர். அடிக்கொரு தடவை ஒழுங்குப் பிரச்சினைகளையும் எழுப்பி நின்றனர்.
சுமந்திரன் எம்.பி. தனதுரையில்,
வடக்கில் இராணுவமயப்படுத்தல், ஆள் கடத்தல் அதிகரிப்பு மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றை சுட்டிக்காட்டிய வேளையிலேயே ஆளும் தரப்பினர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பி நின்றனர்.
அமைச்சர்கள் சிலர் தங்களுடைய தெளிவுபடுத்தல்களை முன்வைத்தனர். பிரதியமைச்சர்களான கீதாஞ்சன குணவர்தன, ஹிஸ்புல்லா ஆகியோரும் அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அளுத்கமகே, எம்.பி.க்களான ஏ.எச்.எம். அஸ்வர், சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் இறுதி நேரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சுமந்திரன் எம்.பி. யுடன் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் ஒழுங்குப் பிரச்சினைகளை அடிக்கொரு தடவை எழுப்பி நின்றனர்.
தன்னை உரையாற்றவிடாது இடைஞ்சல்களை ஏற்படுத்துவதாக அக்கிராசனத்தின் கவனத்திற்கு சுமந்திரன் எம்.பி. கொண்டு வந்ததுடன் கூட்டமைப்பின் தலைவரும் எம்.பி. யுமான இரா.சம்பந்தனும் ஒரு தடவை எழும்பி ஆளும் தரப்பினரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டார்.
எனினும் மேற்குறிப்பிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் இடையூறு விளைவிப்பதை நிறுத்தவில்லை. அஸ்வர் எம்.பி. எதற்கெடுத்தாலும் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிக் கொண்டே இருந்தார். இதன் போது தனக்கு தண்ணீர் குடிப்பதற்கு ஆளும் தரப்பினர் இடமளிப்பதாக தெரிவித்த சுமந்திரன் எம்.பி.
சினம் பிடித்த நாய்கள் கூக்குரல் இடுகின்றன. கோமாளியை சபையை விட்ட வெளியேற்றவும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய அஸ்வர் எம்.பி. நிலையியற் கட்டளையின் பிரகாரம் உரையை வாசிக்க முடியாது தமிழ்த் தெயாத நாய் தமிழ் பற்றி பேசுகிறது என்கையில், எனக்கு அஸ்வரை விடவும் நன்றாகவே தமிழ் தெரியும் எனது மிகுதி உரையை தமிழிலேயே ஆற்றுகின்றேன் எனக் கூறிய சுமந்திரன் நல்லிணக்கம் பற்றி எடுத்தியம்பினார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் மக்கள் ஆணையை பெற்றவர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும் அரசாங்கத்தின் அமைச்சரவைக்குள் குற்றவாளி இருக்கின்றார் என்று கூறுகையில் எழுந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சுமந்திரன் எம்.பி.யுடன் வாதத்தில் ஈடுபட்டார். எனினும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒலிவாங்கி முடுக்கி விடப்படவில்லை.
கடுமையான இடைஞ்சல்களுக்கு மத்தியில் சுமந்திரன் எம்.பி. உரையாற்றிக் கொண்டிருக்கையில் அஸ்வர் எம்.பி. மீண்டும் இடைஞ்சலை ஏற்படுத்தினார்.
அப்போது அவைக்கு தலைமை தாங்கிக் கொண்டிருந்த குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் அஸ்வர் எம்.பி.க்கு இறுதி எச்சரிக்கை விடுத்ததுடன் இனியும் இடையூறு விளைவித்தால் சபையை விட்டு வெளியேற்றி விடுவேன் என்று கடுந்தொனியில் எச்சத்தார். இதனையடுத்தே அஸ்வர் எம்.பி. அமைதியடைந்தார்.