சிநேகம் பேசி ஏமாற்றினார் மஹிந்த ; முதலமைச்சர் சி.வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், “மஹிந்த – சிங்கள செல்பி” என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நூலில், மஹிந்த ராஜபக்‌ஷ, எப்போதும் நட்புறவுடனே உரையாடுவார் எனவும், அவர் எதற்கும் மறுப்புத் தெரிவிப்பதில்லை என்றும், தனது மனசாட்சியுடன் கூட அவர் மறுப்புக் கூறியிருக்க மாட்டார் எனவும் எழுத்தாளர் குறிப்பிட்ட விடயத்தைக் மேற்கோளிட்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி, “மஹிந்த ராஜபக்‌ஷ மீது, பொருத்தமான விவரிப்பு ஆகும். எனது பகுதியிலிருந்து எழுந்த கடுமையான எதிர்ப்புக்கு மத்தியிலும், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக, 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி, அவரின் முன்னால் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டேன். அவர், மிகவும் நட்புறவுடன் காணப்பட்டார்.

“அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி, அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அவரை நான் சந்தித்தேன். அவர், முழுவதும் மகிழ்வாகக் காணப்பட்டார். ஆட்சிக்காலம் நிறைவுபெற்றுக் கொண்டிருந்த இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுநரை மாற்றுவது உள்ளிட்ட சுமார் 10 கோரிக்கைகளை நான் கொண்டிருந்தேன். இராணுவப் பின்புலம் கொண்ட ஆளுநருக்கான தேவை கிடையாது எனவும், சிவிலியன் ஆளுநரை நியமிக்க வேண்டுமெனவும் நான் குறிப்பிட்டேன். மஹிந்த, உணர்வுடன் பதிலளித்தார், ‘ஆமாம், நிச்சயமாக. நாம் மாற்ற வேண்டும். ஆனால், இவ்வாண்டு ஜூலையில், அவரது பதவிக்காலம் முடிவடையும் வரையும் நாங்கள் பொறுப்போம். அதன் பின்னர், சிவிலியன் ஒருவரை நான் நியமிப்பேன்’ என்று தெரிவித்தார். உண்மையில், பொருத்தமான சிலரின் பெயர்களை வழங்குமாறு கேட்டார், நானும் கொடுத்திருந்தேன்.

“ஜூலை வந்த போது, எனக்கு வழங்கிய வாக்குறுதியை மறந்துவிட்டு, அதே ஆளுநருக்கு பதவி நீட்டிப்பை வழங்கினார். உண்மையில், நான் வழங்கிய 10 கோரிக்கைகளையும், ஆர்வத்துடன் பெற்று, அவற்றைப் பற்றி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போதிலும், அதில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என நான் நினைக்கிறேன். மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, அவர் வேறொன்றைச் சொல்வார்” என்று குறிப்பிட்டார்.

“பயங்கரவாதம்” என்ற சொல்லுக்கான அரசியல் உள்ளார்ந்த அர்த்தத்தை, வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்கள் புரிந்துகொள்ளவில்லை என்ற, நூலாசிரியரின் கருத்தைக் குறிப்பிட்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதிக்குப் பின்னரான பூகோள அரசியலில், ஆயுதந்தாங்கிய அனைத்து அரசியல் நடவடிக்கைகளும் “பயங்கரவாதம்” எனப் பெயரிடப்பட்டன எனவும், தமிழ் ஆயுததாரிகளை (விடுதலைப் புலிகளை) அல் கொய்தா அமைப்புடன் சமப்படுத்தி, “பயங்கரவாதிகள்” என ராஜபக்‌ஷ அழைத்தாரெனவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நிலையிலும் ஊடகங்களில், விடுதலைப் புலிகளை “தீவிரவாதிகள்” அல்லது “பயங்கரவாதிகள்” என அழைப்பதைக் காண முடிவதாகக் குறிப்பிட்ட அவர், உள்ளூர் அரசியல் ஆயுத நடவடிக்கைகளை, பூகோளரீதியான புலப்பாடாக மாற்றுவதில், ராஜபக்‌ஷ வெற்றிபெற்றார் என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில், அஸ்கிரிய மகாநாயக்கரையும் மல்வத்து மகாநாயக்கரையும் சந்தித்தமை பற்றி, தனதுரையில் குறிப்பிட்ட முதலமைச்சர், மல்வத்து மகாநாயக்கர், தங்களை அன்புடன் வரவேற்றதாகவும், அஸ்கிரிய மகாநாயக்கர், கேட்கப்படாமல் எரிச்சல் தரும் விதத்தில் அறிவுரை வழங்குபவராகச் செயற்பட்டார் என்றும் குறிப்பிட்டார்.

“மல்வத்துபீட தேரர், அன்புள்ளம் கொண்டவராக இருந்ததோடு, மக்களின் வருந்துதல்களை இல்லாது செய்வது தொடர்பில் அக்கறை கொண்டிருந்தார். அஸ்கிரிய கராக சபா உறுப்பினர்கள், உயர் தேரருடன் (அஸ்கிரிய மகாநாயக்கருடன்) தனிப்பட்ட கலந்துரையாடலுக்கு அனுமதிக்கவில்லை. ஆனால், அனைவரும் உயரமாக இருக்கையில் அமர்வதை அவர்கள் உறுதி செய்தார்கள். நானும் என்னுடைய குழுவினரும், தாழ்வான அளவில் காணப்பட்ட சோபாக்களில் அமர்வதை ஏற்படுத்தினர். சிங்கள பௌத்த உணர்வுகளை வெளிப்படுத்துவதில், அவர்கள் ஆர்வமாக இருந்தனர்” என்று குறிப்பிட்டார்.

சமஷ்டி கோருவது என்பது, பிரிவினைக்கான கோரிக்கை அல்ல என, உயர்நீதிமன்றத்தால் அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பைச் சுட்டிக்காட்டிய போதிலும், அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருந்திருக்கவில்லை என்று குறிப்பிட்ட முதலமைச்சர், கண்டியின் காணப்பட்ட உயர்தட்டுப் பிரிவினரே, 1930-40களில், சமஷ்டிக்கான கோரிக்கையை முன்வைத்தார் என்ற வரலாற்றைக் கூறிய போதிலும், அவர்கள் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் காணப்படவில்லை என்றும் விமர்சித்தார்.

Related Posts