சிட்னி காபி ஹோட்டலில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் தப்பி வந்துள்ள நிலையில் தற்போது மேலும் 2 பேர் வெளியேறியுள்ளனர்.
இவர்களையும் சேர்த்து இதுவரை 5 பேர் மீண்டு வந்துள்ளனர். சிட்னி லின்ட் சாக்கலேட் கேஃப் ஹோட்டலை சிறை பிடித்துள்ளான் ஒரு தீவிரவாதி.
கடந்த 7 மணி நேரமாக இந்த சிறைபிடிப்பு நீடிக்கிறது. ஹோட்டலுக்கு வெளியே பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தீவிரவாதியுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. ஆனால் ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அப்பாட் தன்னுடன் பேச வேண்டும் என்று தீவிரவாதி கூறி வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் சில மணி நேரத்திற்கு முன்பு 3 பிணையாளிகள் அங்கிருந்து தப்பி வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் ஹோட்டல் ஊழியர் ஆவார். இந்த நிலையில் தற்போது மேலும் 2 பேர் வெளியேறி வந்துள்ளனர். இதை போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் துணை போலீஸ் கமிஷனர் காத்தரின் பர்ன் கூறுகையில், இதுவரை 5 பேர் வெளியே வந்துள்ளனர். அவர்கள் தப்பி வந்துள்ளனர் என்றார். மேலும் அவர் கூறுகையில், அவர்கள் நலமுடன் உள்ளனரா என்பது பரிசோதிக்கப்படுகிறது. அவர்களுடன் இணைந்து உள்ளே என்ன நிலவரம் என்பதை அறிய முயன்று வருகிறோம். உள்ளே இருப்பவர்களில் யாரேனும் காயமடைந்துள்ளனரா என்பது தெரியவில்லை. ஆனால் யாரும் காயமடையவில்லை என்பதையும் எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றார் பர்ன்.
இதற்கிடையே, போலீஸ் கமிஷனர் ஆண்ட்ரூ சிபியோன் கூறுகையில், உள்ளே இருக்கும் தீவிரவாதியின் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. அவன் உண்மையில் தீவிரவாதியா என்பதும் கூட தெளிவாகத் தெரியவில்லை. இதை தீவிரவாத செயலாகக் கூட நாங்கள் இன்னும் உறுதி செய்யவில்லை. அந்த நபருடன் பேச முயற்சித்து வருகிறோம் என்றார்.