சிங்கள, முஸ்லிம் மக்களை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேற்றுவதே மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம் என தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இந்த விடயம் குறித்து அரசியல்வாதிகள் கருத்து வெளியிட தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் மீள்குடியேற்ற செயலணி குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடமாகாணத்திலிருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் இப்பகுதியில் அந்தஸ்து வழங்குவதே இந்த மீள்குடியேற்ற செயலணியின் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.
வட மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பிலான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சர்கள் தலைமையிலான விசேட செயலணியொன்று கடந்த யூலை மாதம் அமைக்கப்பட்டது.
அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணி, வடக்கில் சிங்கள மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களில் மீண்டும் சிங்கள மக்களை மீளக் குடியமர்த்துவது குறித்தும் நடவடிக்கை எடுக்கும் என அரசாங்கம் தகவல் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த நிலையில் இன்னமும் அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவது மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றத் திட்டங்களை ஆராய்வதற்கென குறித்த செயலணி உருவாக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வாணிப மற்றும் கைத்தொழிற்துறை அமைச்சர் ரிசாட் பதியூதீன் தலைமை வகிக்கும் இந்த செயலணியில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, வீடமைப்பு அமைச்சு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, மீள்குடியேற்ற அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களும், நிதி அமைச்சின் செயலாளர் அல்லது நிதி அமைச்சரால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதி ஆகியோருடன் மாவட்ட அரச அதிபர்களும் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை வடமாகாண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடக்கு மாகாண சபையை நிராகரித்து மத்திய அரசாங்கம் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதை வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.