யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை மூடி மாணவர்களுக்கு விடுமுறை வழங்க நிர்வாகம் முடிவு செய்தமைக்கு சிங்கள மாணவர்களின் நடவடிக்கையே காரணமென நம்பகமான தகவல் தெரிவித்தது.
அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவர், கடந்த செப்ரெம்பர் 25ஆம் திகதியிலிருந்து தொடர் உணவு ஒறுப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எதிரான வழக்கை அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றுமாறு வலியுறுத்தியே அவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அரசியல் கைதிகளின் கோரிக்கையை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரத்திலிருந்து விரிவுரைகள் புறக்கணிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அவர்கள் தமது போராட்டத்தை விரிவாக்கி நேற்று திங்கட்கிழமை முதல் பல்கலைக்கழக நிர்வாக முடக்கப் போராட்டத்தை நடத்தினர்.
தமிழ் மாணவர்களின் நடவடிக்கைக்கு எதிராக சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர். அத்துடன், தமது கற்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தை சில நாள்களுக்கு விடுமுறை வழங்கும் முடிவுக்கு நிர்வாகம் வந்தது. அதுதொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.