சிங்கள மக்கள் மத்தியில் வடக்கு மாகாணம் குறித்துப் பிழையான செய்தி பரப்பப்படுகிறது! – முதலமைச்சர்

தென்னிலங்கைச் சிங்கள மக்கள் மத்தியில் என்னைப் பற்றியும் வடக்கு மாகாண சபை பற்றியும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இதை நான் நேரடியாகத் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்தேன். – இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன்.

4

வடக்கு மாகாண விவசாய அமைச்சினால், அளவெட்டிப் பகுதியில் பெண்களைத் தலைமைத்துவமாக கொண்ட 32 குடும்பங்களுக்கு நல்லின ஆடுகள் வழங்கும் நிகழ்வு அளவெட்டி அபிவிருத்தி மன்ற செயலாளர் இ.இராஜகோபால் தலைமையில் நேற்று செவ்வாய்க் கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

நான் தென்பகுதியில் விமான நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த போது அங்கு சிங்கள தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பாகியது. அதில் அரசாங்கம் வடக்கு மாகாண சபைக்கு 5 ஆயிரத்து 631 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்றும் அதில் ஆயிரத்து 855 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது என்றும் உண்மைக்குப் புறம்பான செய்தி சொல்லப்பட்டது.

தென்னிலங்கை மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கி வடக்கு மாகாண சபையை கீழ்மைப்படுத்தும் முயற்சியே இது. உண்மையில் வட மாகாண சபைக்கு ஆயிரத்து 855 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை சபை உரிய முறையில் செலவிட்டுவருகிறது. எனவே அரசாங்கம் திட்டமிட்டமுறையில் பொய்ப் பிரசாரத்தை தென்னிலங்கை மக்கள் மத்தியில் மேற்கொண்டுவருவது புலனாகிறது.

அரசாங்கம், தாம் தமிழ் மக்களுக்கு உதவி செய்கின்றோம் ஆனால் அங்குள்ள மாகாண சபை அதனை உரிய முறையில் பயன்படுத்தவில்லையென்ற பிரசாரத்துக்காகவே இப்படி பொய் சொல்கிறது.- என்றார்.

தொடர்புடைய செய்தி

தகர் என்ற பெயரில் நல்லின ஆடுவளர்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் வடமாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சு முன்னெடுப்பு

Related Posts