கடும்போக்கு வாதிகள் வடக்கில் மாத்திரமின்றி தெற்கிலும் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
சிங்கள மக்களைப் போன்று ஏனைய இன மக்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தற்போதைய அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் மருதனார் மடம் – இராமநாதன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தமது தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக இனங்களுக்கு இடையிலான பிரச்சினையை பெரிதுபடுத்தி இந்தப் பிரச்சினையை அடிப்படையாக வைத்து கடும்போக்குடன் செயற்பட்ட பலர் அன்று இருந்தனர். அவர்கள் இன்றும் உள்ளனர்.
அதிகளவில் அதிகாரங்ளைப் பெற்றுக்கொள்வதற்காக செயற்படும் பிரிவினர் உள்ளனர். அவர்கள் கடும்போக்குவாதிகள். அவர்கள் வடக்கிலும் இருக்கின்றனர். தெற்கிலும் உள்ளனர்.
சிங்கள மக்களைப் போன்று ஏனைய அனைத்து இன மக்களுக்கும் சம அதிகாரங்களை வழங்க வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டில் புதிய அரசாங்கம் இருக்கின்றது.
இராணுவத்தினால் மட்டுமல்ல, தமிழீழ விடுதலைப் புலிகளாலும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு துன்பம் ஏற்பட்டது. பலர் கொலை செய்யப்பட்டனர்.
வட,கிழக்கு மக்கள் இப்பிரச்சினையினால் இருபுறமும் சிக்கி துன்பங்களையே அனுபவித்தனர் – என்றார்.