சிங்கள மக்களின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்காது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்தியாவின் அனுசரணை தேவையே தவிர வேறெந்த நாட்டினதும் அழுத்தங்களால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லையென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இது தொடர்பாக சமூக ஒருமைப்பாடு மற்றும் தேசிய மொழிகள் தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்;
தமிழ் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு அறவழிப் போராட்டத்தை மேற்கொள்ளப் போவதாகவும் சர்வதேசத்தின் அழுத்தத்துடன் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப் போவதாகவும் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளமையை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏனென்றால் சர்வதேச அழுத்தங்களில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. அரசாங்கம் இவ்வாறான அழுத்தங்களுக்கு அடிபணிய போவதும் இல்லை.
சிங்கள மக்களின் ஆதரவுடனேயே தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை பெற முடியும். பெரும்பாலான சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவதை ஆதரிக்கின்றனர்.
ஆனால், சர்வதேச அழுத்தத்தை நாடினால் அந்த ஆதரவும் கிடைக்காமல் போய்விடும்.
ஆனால் இப் பிரச்சினையில் மூன்று தரப்பு தொடர்புபட்டுள்ளது. இலங்கை அரசு தமிழர் தரப்பு மற்றும் இந்தியா.
எனவே, இந்தியாவினது மத்தியஸ்தம் அவசியமானதாகும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.