தமது பிள்ளைகள் கொலை செய்யப்பட்டு அந்த காயம் மறைவதற்குள் கொலையாளியிடம் நிவாரணங்களை பெற்றுக் கொள்வது மட்டுமல்லாமல் கொலையாளியுடன் புகைப்படத்திற்கு காட்சி கொடுக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்கு வடபகுதி தமிழர்கள் சிறந்த பாடத்தை கற்றுக்கொடுத்துள்ளனர். இவ்வாறு சிங்கள இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது.படுகொலையாளிகளுடன் எந்த இணக்கமும் இல்லை என்பதை தமிழர்கள் வெளிகாட்டியுள்ளனர் என அந்த சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஆசிரியையை முழங்காலிட்டவர்கள், பாடசாலை அதிபர்களை தாக்கியவர்கள், மண்வெட்டி, சேலை, சாரம், செல்லிடப் பேசிகள், புரியாணி பொதி, சாராயம் கிடைக்குமானால் எந்த கொடியவனுக்கும் வாக்களிக்கும் தென் பகுதி சிங்களவர்களுக்கு, இன்னும் தமக்கான வீட்டை கூட கொண்டிருக்காத வடக்கு தமிழர்கள், பிச்சையெடுத்து உண்டாலும் மனசாட்சியை காட்டிக்கொடுக்க வேண்டாம் என்ற செய்தியை கூறியுள்ளனர்.
25 கோடி ரூபாவுக்கு மக்களை காட்டிக் கொடுத்த பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பாறை ஒன்று இல்லை என்று கூப்பாடு போட்ட பச்சை துரோகிகளுக்கு புள்ளடியிட்ட சிங்களவர்களுக்கு, தம்முடன் இருந்த கே.பி துரோகியாகி, குத்துக்கரணம் அடித்தாலும் அவரது வார்த்தை ஜலாங்களுக்கு நாங்கள் ஏமாந்து விடவில்லை என் தமிழர்கள் இடித்துரைத்துள்ளனர்.
வடக்கு மக்கள் வயதான தலைவரான சம்பந்தனுக்கு பலமில்லை என்று வாயை மீறிய வார்த்தைகளை கூறவில்லை. விக்னேஸ்வரனின் மைத்துனர் அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதால் அவர் ஒரு துரோகி என்றும் அந்த மக்கள் கருதவில்லை.
சுமந்திரன் டை கோர்ட் அணிபவர் அவருக்கு கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகள் புரியாது என்றும் வட பகுதி மக்கள் தெரிவிக்கவில்லை.
சகல இடங்களிலும் இராணுவம் எமக்கு பயமாக இருக்கிறது என்று கூறி அந்த மக்கள் கட்டில்களுக்கு கீழ் சென்று மறைந்து கொள்ளவில்லை.
தென் பகுதி சிங்களவர்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் வகையில் நாட்டுக்கும் தமக்கும் கெடுதியைச் செய்யும் வில்லனைப் புரிந்து கொண்ட வடபகுதி மக்கள் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே அவனை தோற்கடித்தனர்.
எனினும் வடபகுதி மக்களின் இந்த பாடத்தை தவறாக சித்தரிக்கும் சில தவளைகள் அதனை இனவாதம் என்கின்றனர்.
தமிழர்களை அடித்து படுகொலை செய் என்று கூறிய இந்த இனவாதிகளே தமிழர்களிடம் சென்று முழு வடக்கிலும் 288 வாக்குகளை மட்டும் பெற்ற பின்னர், ஐயோ அவர்கள் இனவாதிகள் என்கின்றனர்.
அரசாங்கத்தின் மோசடிகள் தென் பகுதி சிங்களவர்களின் கண்களை மறைத்தாலும், வடபகுதி மக்களின் கண்கள் குருடாகவில்லை என்பது வடக்கில் நடந்து முடிந்த தேர்தல் வெளிகாட்டியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.