இலங்கையில் சிங்கள மக்கள் பெறும் சலுகைகள் எல்லாவற்றையும் தமிழர்களும் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் சனிக்கிழமை (02) தெரிவித்தார்.
கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி மக்களது வாழ்வாதார மேம்பாட்டை ஆராயும் முகமாக அப்பகுதி சமுர்த்தி உத்தியோகத்தரால் ஒழுங்கு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பு பொருளாதார அபிவிருத்தி மண்டபத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், ‘பல்லாயிரம் உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுக்க வைத்து, தமிழர்களது ஒரு சந்ததியை அபிவிருத்தியிலும் அரசியலிலும் அழிந்துபோக வைத்த போராட்டத்தின் பிடியிலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் மீள வேண்டும்’ என்றார்.
இலங்கை – இந்திய ஒப்பந்தம், இலங்கைக்குள் இந்தியாவின் உள்வருகை, புலிகள் – பிறேமதாஸாவுடனான கூட்டிணைவு, இந்தியா வெளியேற்றப்பட்டமை, பிறேமதாசா அரசு – புலிகள் இடையில் யுத்தம் நடைபெற்றமை, பிறேமதாசாவின் இறப்பு என புலிகள் அமைப்பு, அரசியல் ரீதியில் சரியான பக்குவம் இன்மையால் செய்த தவறுகளால் அடியோடு அழியும் நிலைமைக்கு வந்தது.
இந்தச் சூழ்நிலைகளால் தான் தமிழர்கள், இலங்கையினை விட்டு வெளியேறி நாடுநாடாக அலைய வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.
அன்று நாங்களும் (ஈ.பி.டி.பி) ஆயுதம் ஏந்திய அமைப்பு என்ற காரணத்தால் தான் எமது கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆயுதத்தை கைவிட்ட நாளிலிருந்து மக்களது அபிவிருத்தியில் தனது சக்திக்கு அப்பாற்பட்ட வகையில் அக்கறை செலுத்தி செய்து வருகின்றார்.
ஈ.பி.டி.பி, யாருடனும் சேர்ந்து அரசியல் பங்காளிகளாக இருந்தாலும் ஒருபோதும் அவர்களது கைப்பொம்மைகளாக இருந்து கொள்வதில்லை. மத்தியிலிருக்கும் அரசுடன் முடியுமான அளவு பேரம்பேசி அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கப் போராடிக் கொண்டிருக்கின்றது.
போரினால் அழிக்கப்பட்ட எமதுமக்கள் தற்போது தான் ஓரளவு அதிலிருந்து மீண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.