சிங்களம் படித்து அபிலாஷைகளைக் கூறுங்கள்: முதலமைச்சர் சி.வி

‘தமிழ் மக்கள், சிங்கள மொழியைப் படித்து, தங்களின் உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாஷைகளையுந் நேரடியாக சிங்கள மக்களிடம் தெரிவியுங்கள். இதன்மூலம் இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை இல்லாமல் செய்யப்படுகின்றது’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ் மத்திய கல்லூரியின் 200ஆவது வருட நிறைவு கொண்டாட்டம், கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியதாவது,

‘எப்பொழுதும் பன்மொழி, பல்மதத் தேர்ச்சி நன்மை அளிக்கவல்லன. இன்றைய காலகட்டத்தில்நாங்கள் தமிழையும் சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படிக்க வேண்டிய ஒரு கட்டத்தில் இருக்கின்றோம்.

ஒரு தமிழ் மகன், சிங்களத்தையும் ஆங்கிலத்தையும் நன்றாகப் படித்தால்த்தான், சிங்கள மக்களுக்கு தனது குறைகளை, எதிர்பார்ப்புக்களை, தேவைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறக்கூடியதாக இருக்கும். வெறுமனே தமிழில் பாண்டித்தியம் பெற்று தமிழ் மக்களிடையே எமது கருத்துக்களை கொண்டு செல்வதால் அவை இங்கேயே தேங்கியிருப்பன.

அதனால் சிங்கள மக்கள் எமது உணர்வுகளையுந் தேவைகளையும் அபிலாசைகளையுந் நேரடியாக உணராது விட்டு விடுகின்றார்கள். இதையறிந்து தான் தெற்கில் பாடசாலை மாணவ மாணவியருக்குத் தமிழ் ஒரு கட்டாய பாடமாகப் போதிக்கப்பட்டு வருகின்றது.

ஒரே நாட்டிற்குள் எம்முடைய தனித்துவத்தைப் பேணிக்கொண்டு ஒருமித்து வாழப் போகின்றோம் என்ற முடிவுக்கு நாம் வந்துவிட்டோமானால் எமது சகோதர மொழியையும் ஆங்கிலத்தையும் கற்றுத் தேர்ந்து கொள்ளுதல் மிகஅவசியம். எம்முடைய இரு இனங்களுக்கிடையே இருக்கும் சந்தேகங்கள், வெறுப்புக்கள், புரிந்துணராமை போன்றவை மற்றையவரின் மொழியை நாம் தெரிந்து கொள்வதால் அவை இல்லாதாக்கப்படுகின்றன அல்லது இல்லாதாக்கப்படுவதற்கு வழிவகுக்கின்றன.

ஆகவே சகோதர மொழியைக் கற்பதால் சகோதர மக்களிடையே நிலவும் எம்மைப்பற்றிய தப்பபிப்பிராயங்களை நீக்க அது உதவி புரிகின்றது. எம்முடைய மொழியை நன்றாகப்படித்துப் பேணிப் பாதுகாத்து வரும் அதே நேரத்தில் பிறிதொரு மொழியில் பாண்டித்தியம் பெறுவது பிழை என்று கூற முடியாது.

சிங்கள மொழியைக் கற்றால் தமிழ் புறக்கணிக்கப்படக் கூடும் என்ற கருத்து எம்மக்கள் சிலரிடையே இருக்கின்றது. வடகிழக்கு மாகாணங்களுக்கு உரிய உரித்துக்கள் தரப்படாது மத்தியினுடைய அதிகாரம் இந்த இரு மாகாணங்களில் ஊடறுத்துச் செல்லும் நிலை தொடர்ந்தால் அவ்வாறான ஒரு நிலை ஏற்படக் கூடும். ஆனால் நாங்கள் தற்போது எம்முடைய தனித்துவத்தை ஏற்றுக் கொள்ளும் ஒரு அரசியல் யாப்பை யாத்தளிக்க நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். எனவே அடுத்த கட்டமான நல்லிணக்கத்திற்கு சகோதர மொழிப் பாண்டித்தியம் உதவி புரியும் என்று நம்புகின்றேன்.

அரசியல் ரீதியாக நாம் எதிர்பார்க்கும் எல்லாம் கிடைக்கும் என்று நாங்கள் நம்பாவிட்டாலும் எம்முடைய பல கரிசனைகள் மனதிற்கு எடுக்கப்பட்டு உரிய அரசியல்த் தீர்வை நாங்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையை நாம் வளர்த்துக் கொள்வோம். நம்பிக்கைதான் வாழ்க்கை. இறைவன் மீது பாரத்தைப் போட்டு நம்பிக்கையுடன் முன் செல்ல முன்வருவோமாக!

பல விதமான சிக்கல்களுக்குள்ளும், தடங்கல்களுக்குள்ளும், நெருக்குதல்களுக்குள்ளும் அகப்பட்டு தத்தளித்துக் கொண்டிருக்கும் ஜனாதிபதி இயற்கையாகவே தம்முள் கொண்டிருக்கும் மனதாபிமான உணர்வின் நிமித்தமும் பௌத்த கொள்கைகளில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஆர்வம் நிமித்தமும் அவர் இந்த நாட்டை நல்வழியில், நல்லிணக்கத்துடன், நல்ல நிர்வாகத்துடன், நல்லமுறையில் நடத்துவார் என்ற நம்பிக்கை எமக்கெல்லோருக்கும் உண்டு.

இச்சந்தர்ப்பத்தில் ஒரேயொரு சிறிய விடயத்தை மட்டும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன். எமது பகுதிகளில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் பல இங்கு செயற்படும் சில திணைக்களங்களின் முறையற்ற செயல்களினால் முற்றிலும் முடக்கப்படுகின்றன.

இரணைமடு குளக்கட்டு திருத்த வேலைகள் மாரிகாலத்திற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும் என முனைப்புடன் செயலாற்ற விழைகின்ற போது வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு, கனியவள அமைச்சு, மத்திய சுற்றாடல் அதிகார சபை, நகர அபிவிருத்தி அதிகாரசபை, தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு திணைக்களங்களினதும் அதிகார சபைகளினதும் அளவுக்கு மிஞ்சிய தலையீடுகள் காரணமாக மேற்படி அபிவிருத்தி வேலைகள் முன்னெடுக்கமுடியாத நிலையில் உள்ளன.

சுமார் 25000 ஏக்கர் வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கை எதிர்வரும் காலபோகத்தில் மேற்கொள்ள முடியாத ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். மாரிகால கூடுதல் மழை வீழ்ச்சியின் போது இக்குளக்கட்டுக்களின் உறுதித் தன்மை கேள்விக்குறியாகக் கூடுமாதலால் இதன் கீழ் வாழும் குடும்பங்கள் அச்ச நிலையில் வாழ்வது அவதானிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பாக எத்தனையோ கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மாவட்டச் செயலர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் ஒவ்வொரு கூட்டங்களிலும் புதுப் புது பிரச்சனைகளை முன்னெடுத்து இதற்கான தீர்வை எட்டவிடாது தடுப்பதில் மேற்குறிப்பிட்ட திணைக்களங்கள் முனைப்புடன் செயற்படுவது எம்மை விசனத்திற்கு உள்ளாக்குகின்றது.

எனவேஇவ்விடயம் தொடர்பில் உங்கள் தனிப்பட்ட கவனத்தையும் செல்வாக்கையும் பிரயோகித்து இவ்வேலைகள் இடையூறின்றி நிறைவு செய்யப்பட ஆவன செய்வீர்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம்’ என அவர் மேலும் கூறினார்.

Related Posts