சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழில்

யாழ்ப்பாணத்தில் தற்போது அமைதி நிலவுகிறது அத்துடன் மக்களின் வாழ்வும் முன்னேறி வருவது போல் தெரிகின்றது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ். பொது நூலகத்திற்கு காலை 11:30 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாம் யாழ்ப்பாணத்தில் நாம் இருக்கப்போவது ஒரு நாள் கூட இல்லை. இதனால் பரவலான கண்ணோட்டத்துடன் இங்குள்ள நிலமைகளைக் கூற முடியாது. 30 ஆண்டு காலமாக இந்த இடத்தில் என்ன நடந்தது என்று பத்திரிகைகள் மூலம் அறிந்து கொண்டோம்.

தற்போது சூழலில் பார்க்கும் பொழுது அமைதி நிலவுவதுடன் மக்களின் வாழ்வும் முன்னேறி வருவது போல் தெரிகின்றது.

அத்துடன் சிங்கப்பூர் சார்ந்த வகையில் இந் நூலகத்திற்கு சில உதவிகளை செய்து வந்தோம் இதனைப் பார்ப்பதற்காகவும் யாழ்ப்பாணத்திற்கு வந்தோம்.

சிறுவர் பகுதியில் இன்னும் சிறார்களின் படிப்புக்குத் தேவையானவை எதனை எம்மால் செய்ய முடியும் என நூலகரிடம் கேட்டறிந்து கொண்டேன்.

அதனடிப்படையில் எம்மால் முடிந்தளவு சிங்கப்பூரில் இருக்கும் மக்களின் சார்பில் உதவிகளைச் செய்ய இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நூலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட இக் குழுவினரிடம் நூலகச் செயற்பாடுகளை கணனி மயப்படுத்தவதற்கு தேவையான பயிற்சிகளை வழங்க உதவுமாறு யாழ். நூலகத்தின் பிரதான நூலகர் சில உதவிகளையும் நூலகத்தின் அபிவிருத்திக்காக கோரியிருந்தார்.

அதனடிப்படையில் தேசிய நூலக சங்கத்துடன் கலந்துரையாடவுள்ளதுடன் அவர்களின் ஆலோசனைக்கமைய பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நூலகத்தில் தமிழ் பிரிவு என தனியான ஒன்றை அமைக்குமாறு மாநாகர சபை முதல்வரிடம் வேண்டுகோள் ஒன்றினையும் அவர் விடுத்துள்ளார்.
சிறுவர் பகுதி உட்பட இரவல் வழங்கும் பகுதி, கணனிப் பிரிவு, விசெட செயற்கைப் பகுதி என பல்வேறு பகுதிகளையும் பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தில் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சரின் பாரியார், சிங்கப்பூர் உயர்தானியகராலய குழுவினர், டக்ளஸ் தேவானந்தா, மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா மற்றும் நூலகப் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து யாழ். மாநகர சபையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதன் போது இவர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

முன்று நாள் உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று முன்தினம் இரவு இலங்கை வந்துள்ள இவர் இன்றைய தினம் யாழிற்கு விஜயத்தினை மேற்கொண்டார். இங்கு வந்துள்ள இவர்கள் காலை நல்லூர் கோயில், யாழ். நூலகத்தைப் பார்வையிட்டதுடன் மாநகர சபை மேஜரைச் சந்தித்துள்ளனர். பிற்பகல் வடமாகாண ஆளுநரையும் சந்திக்கவுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts