Ad Widget

சிங்கப்பூர் வீடுகள் வடக்கிற்கு பொருத்தமுமில்லை, அவசியமுமில்லை!

21இலட்சம் வீட்டிற்கு பலத்த எதிர்ப்பு உண்டு. மக்களை பொறுத்த வரையில் இந்த வீட்டின் சூழல் நிலையை எங்களுடைய மக்கள் முழுமையாக பார்க்கும் போது அதனை ஏற்கமுடியாது. வீடில்லாத குடும்பத்திற்கு இந்த வீட்டைக் கையளித்து ரி.வி, கட்டில் கொடுத்தால் சரி என்று சொல்லக்கூடும்.

ஆனால் சமுதாயத்தில் என்ன நடக்கும். ஏற்றத் தாழ்வுகள் ஏற்படுத்தும் நிலையை தோற்றுவிக்கும். என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 21இலட்சம் வீட்டுத்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் வீட்டுத்திட்டங்களை அமைக்கும் போது மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்காது எங்களுக்கு நன்மை செய்வதாக கருதிக்கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது மனவேதனைக்குரிய விடயம். 21 இலட்சம் வீட்டை நான் சென்று பார்க்க வேண்டிய அவசியமில்லை பொறியியலாளர்கள் போய் சென்று பார்த்து விட்டு வந்து கூறினர். இருப்பினும் நானும் சென்று பார்த்தேன். கட்டடம் சரியில்லை. வீட்டிற்கு உள்ளே காலடி எடுத்து வைத்தேன் உள்ளே சரியான சூடு, நடுச்சுவர் கோரை கையால் அடிச்சால் உடையும். திறக்கக்கூடிய ஆணிகள் உண்டு.இவ்வாறான பொருத்து வீடுகள் வடக்கிற்கு பொருத்தமுமில்லை, அவசியமுமில்லை.

வடக்கை சிங்கப்பூராக மாற்றமுடியாது. பொருத்திய வீடுகள் ஏதாவது ஒரு பகுதிக்கு பிரச்சினை ஏற்பட்டால் அந்த உதிரிப்பாகங்களை எங்கிருந்து எடுப்பது. 2வருடத்திற்கு பிறகு யாரிடம் கேட்பது. அரசாங்கத்திற்கு பணம் தேவையாக இருப்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். 130 ஆயிரம் மில்லியன் பணம் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் மூலம் உடனுக்குடன் கிடைப்பது நன்மை பயப்பதையும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் 15வருடத்திற்கு பிறகு இந்த காசு மீளவும் வழங்கப்போகிறோம். இது அன்பளிப்பு அல்ல கடன். ஆகவே கடன் அடிப்படையில் வீடு நிர்மாணிக்கும் போது சூழலுக்கு ஏற்றவிதத்தில், கூடுதலான மக்களுக்கு கையளிக்கும் விதத்திலும், நீண்டகாலம் வாழும் விதத்திலும் இருக்க வேண்டுமே தவிர சிங்கப்பூர் மாதிரி வீடு வடக்கில் கட்டவேண்டிய அவசியமில்லை என்றார்.

Related Posts