பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார்.
ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களுக்கான சம்பளப் பணத்தை காசோலைகளாகத்தான் வாங்கியுள்ளார். அப்படி வாங்கியுள்ள காசோலைகளில் பெரும்பாலானவை இவரது வங்கி கணக்கில் பணத்தை கொண்டுவந்து சேர்க்கவில்லை. மாறாக, அவரது வீட்டு அலமாரியில் காகிதங்களாகவே படிந்துபோயுள்ளன.
மஞ்சள் காமாலை நோய் முற்றியநிலையில் முத்துக்குமாரின் மருத்துவச் செலவுக்கு சுமார் 40 லட்சம் ரூபாய் வரை தேவைப்பட்டதாம். அந்த சிகிச்சைக்கான பணத்தை தயார் செய்து கொண்டிருந்தபோதுதான், நா.முத்துக்குமாரை மரணம் ஆட்கொண்டு விட்டது.
இவர் வீட்டு அலமாரியில் காகிதங்களாக படிந்து போயிருக்கும் காசேலைகளின் மொத்த பணமதிப்பு ரூ.70 லட்சத்திற்கும் மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த காசோலைகள் எல்லாம் பணமாக மாறியிருந்தால் இன்று நாம் ஒரு மகா கவிஞனை இழந்திருக்க மாட்டோம் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
நா.முத்துக்குமாரை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக் கொண்ட பல தயாரிப்பாளர்கள், அவருக்கு கொடுக்க வேண்டிய சம்பளத்தை முறையாக கொடுக்க தவறியதை நாம் என்னவென்று சொல்வது. இனிமேலாவது அவருக்கு சேரவேண்டிய பணத்தை தயாரிப்பாளர்கள் திருப்பி கொடுக்க முன்வர வேண்டும்.
நா.முத்துக்குமாரின் உயிரை காப்பாற்ற உதவாத அந்தப்பணம், அவர் உயிராக நேசித்த அவரது குடும்பத்தாரையாவது இனி காப்பாற்றட்டும்.