Ad Widget

சிஐடி என கப்பம் வாங்கியவர்களில் ஒருவர் அளவெட்டியில் சிக்கினார்!!

பொலிஸ் புலனாய்வாளர் எனக் கூறி கப்பம் வாங்கிய குற்றச்சாட்டில் அளவெட்டியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய மற்றொருவர் யாழ்ப்பாணம் சிறையில் மறியலில் இருப்பதாக காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பதவிக்கு வந்த பின்னர் முன்னாள் போராளிகள், போர்க் காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்தவர்கள் மற்றும் குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்டோரின் குடும்பங்களுக்கு புலனாய்வாளர்கள் எனக் கூறுவோரால் அலைபேசி ஊடாக கப்பம் கோரப்பட்டது.

பொலிஸ் புலனாய்வாளர்கள் பேசுகின்றோம் எனத் தெரிவிக்கும் அவர்கள், குடும்பத்தில் ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவரைக் கைது செய்ய உத்தரவு கிடைத்துள்ளதாகவும் கைது செய்யாமல் விடுவதற்கு தாம் கூறும் வங்கிக் கணக்கில் பணத்தை வைப்பிலிடுமாறு கோருகின்றனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த வாரம் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதால், அவர் 75 ஆயிரம் ரூபா பணத்தை வங்கியில் வைப்புச் செய்துள்ளார்.

அதன்பின்னர் அழைப்பு எடுத்தவரின் அலைபேசி இலக்கம் துண்டிக்கப்பட்டதால் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பணத்தை வைப்பிலிட்ட சிட்டையுடன் அச்சுறுத்தலுக்குள்ளானவர் முறைப்பாட்டை வழங்கியிருந்தார்.

விசாரணைகளை முன்னெடுத்த காங்கேசன்துறை பொலிஸார், வங்கிக் கணக்கிலக்கத்துக்கு உரியவரை அளவெட்டிப் பகுதியில் வைத்து நேற்றுக் கைது செய்தனர்.

அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கப்பம் கோரி அலைபேசி அழைப்பை எடுத்தவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் மறியலில் இருபவர் எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முற்படுத்தப்பட்டார்..

இதேவேளை, புலனாய்வாளர்கள் எனக் கூறி அலைபேசியில் கப்பம் கோரப்பட்டால் எந்தவொரு பயமுமின்றி அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

Related Posts