சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சிக்கிய சாராயப் போத்தல்கள்

சாவகச்சேரி வைத்தியசாலை விடுதிக்குள் சாராயப் போத்தல்கள் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. வைத்தியசாலை ஆண்கள் விடுதியில் உள்ள நோயாளர் ஒருவரைப் பார்வையிடச் சென்றவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பாதுகாப்புச் சேவை உத்தியோகத்தர் அதுகுறித்து வைத்தியசாலைப் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டனர்.

வைத்தியசாலை பொலிஸாரின் உதவியுடன் ஆண்கள் விடுதிகளின் நோயாளர்களின் அலுமாரிகள் சோதனையிடப்பட்டன. இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு சாராயப் போத்தல்களும் ,வெற்றிலைப் பார்சல்களும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக வைத்தியசாலை பொறுப்பதிகாரியிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, வைத்தியசாலை வளாகத்தினுள் மதுபானங்கள், வெற்றிலை ஆகியன பாவிப்பது தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் பார்வையாளர்கள் சிலவற்றை வாங்கி வந்து நோயாளர்களுக்குக் கொடுப்பது சட்டவிரோதமாகும்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்கப் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் செயற்படுவார்கள். இதனை மீறும் நோயாளர்கள், பார்வையாளர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Related Posts