சாவகச்சேரியில் புதிய நீதிமன்ற கட்டிடத்தொகுதியை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்து வைத்தனர்.
இதில் மாவட்ட நீதிமன்றமும் நீதவான் நீதிமன்றமும் இயங்கவுள்ளன. அத்துடன், இலவச சட்ட உதவி மன்றம், சமுதாய சீர்திருத்தப் பிரிவு என்பனவும் இயங்கவுள்ளன. மேலும், இக்கட்டிடத்தொகுதியின் பின்பகுதியில் 02 நீதிபதிகளின் வாசஸ்தலங்களும் ஒரு அரச சட்டத்தரணியின் வாசஸ்தலமும் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த நீதிமன்ற கட்டிடத்தொகுதியானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 159 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது. இக்கட்டிடத்தொகுதிக்கான நிர்மாணப் பணிகள் 2011ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி நிறைவடைந்திருந்தது. இருப்பினும், இன்றையதினம் இந்த நீதிமன்றம் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டதுடன், வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொஹான் டயஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
2002ஆம் ஆண்டு முதல் இந்த நீதிமன்றம் சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள தனியார் வீடொன்றில் பல சிரமங்களின் மத்தியில் இயங்கி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.