சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் கால்பந்தாட்ட வீரர்கள் மீது தாக்குதல்!!

தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருந்த சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவர்கள், கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர். அதனால் ஏற்பட்ட பதற்றத்தால் கால்பந்தாட்டம் மற்றும் கபடிப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் நேற்றயதினம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய அதிகாரிகள் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென்மராட்சி கல்வி வலய மட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கால்பந்தாட்டப் போட்டிகள் வரணி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றன. இதில் ஆண், பெண் இரு பிரிவினருக்குமான போட்டிகள் நடைபெற்று வந்தன.

20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டியில் கொடிகாமம் திருநாவுக்கரசு மகா வித்தியாலய அணியை சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணி வெற்றிகொண்டு அரையிறுதிப் போட்டிக்கு முன்னெறியது.

அரையிறுதிப் போட்டி நேற்று நடைபெறவிருந்த நிலையில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியின் வீரர்கள், மைதான வளாகத்தில் வைத்து கும்பலொன்றால் தாக்கப்பட்டனர்.

சம்பவத்தில் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணியின் சிறந்த வீரரான தவராசா குபேரன் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளர் துரை விதுஷன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.

அவர்கள் இருவரும் உனடியாக சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் தென்மராட்சி கல்வி வலயத்துக்கும் பொலிஸ் அவசர பிரிவுக்கும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அதிபரால் அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்த கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். எனினும் தென்மராட்சி கல்வி வலய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்தச் சம்பவத்தையடுத்து ஏற்பட்ட பதற்றத்தால், சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் 16 மற்றும் 20 வயதுக்குட்பட்ட அணிகள் அரையிறுதிப் போட்டியில் பங்கேற்காமல் திரும்பின. அதனால் ஆண்கள் பிரிவு கால்பந்தாட்டப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

மேலும் கச்சாய் அ.த.க. பாடசாலை மைதானத்தில் இன்று நடைபெறவிருந்த கபடிப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டன என்று அறிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலை மேற்கொண்டவர்கள், ஏற்கனவே போதைப் பொருள் பாவனை தொடர்பில் சட்ட நடவடிக்கைக்குட்பட்டவர்கள் என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார், தாக்குதலை நடத்தியோர் கைது செய்யப்படுவர் என்று தெரிவித்தனர்.

Related Posts