சாவகச்சேரியில் 60 மில்லியன் ரூபா செலவில் புதிய சந்தை

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள சாவகச்சேரி பொதுச்சந்தையின் ஆரம்ப பணிகள் இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிரதிப்பணிப்பாளர் கே. குணதிலக பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிர்மாணப்பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பணிப்பின் பேரில் நாடளாவிய ரீதியில் 70 சந்தைகள் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த திட்டத்தில் வடமாகாணத்தில் சாவகச்சேரி, பருத்தித்துறை, மற்றும் புதுக்குடியிருப்பு சந்தைகள் அடங்கியுள்ளன. குறித்த 70 சந்தைகளில் இந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ள 20 சந்தை கட்டிடத் தொகுதிகளில் வடக்கில் சாவகச்சேரி சந்தை கட்டிடத் தொகுதி இடம்பிடித்துள்ளது.

இந்த சந்தை வளாகத்திற்குள் இரண்டு கட்டிடத்தொகுதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான நிர்மாணப்பணிகளை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவுக்கு அமைய இராணுவத்தினர் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்விற்கு வடமாகாணசபை உறுப்பினர் கே. சயந்தன், கொடிகாமம் பிரதேசசபை தவிசாளர், சாவகச்சேரி கட்டளை தளபதி, நகரசபை உறுப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Posts