சாவகச்சேரியில் பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை மீள்சுழற்சி செய்வதற்கான நிலையம் அமைக்க சாவகச்சேரி நகர சபையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபைக்கு அண்மையில் வருகைதந்த வேள்ட் விஷன் அதிகாரிகள் நகரசபையினால் மேற்கொள்ளப்படுகின்ற திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி செயற்பாட்டை பார்வையிட்டிருந்தனர்.
இதன்போது தரம் பிரிக்கப்படுகின்ற பிளாஸ்ரிக் கழிவுப் பொருள்களை கொள்வனவு செய்வதற்கு உள்ளூர் பிளாஸ்ரிக் மீள்சுழற்சி நிறுவனங்கள் போதியவில் இல்லை. அதனால் தரம் பிரிக்கப்பட்ட அதிகளவான பிளாஸ்ரிக் பொருள்கள் தேங்கிக்கிடப்பதாக நகராட்சி மன்ற தவிசாளர் திருமதி சிவமங்கை இராமநாதனால் வேள்ட் விஷன் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து அந்தப் பகுதியிலேயே பிளாஸ்ரிக் கழிவுகளை துகள்களாக்கி மீழ் சுழற்சிக்கு உள்படுத்தும் நிலையம் ஒன்றை அமைக்கவும் அதனை ஏற்றுமதி செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த மீள்சுழற்சி நிலையத்தை பொது அமைப்பு ஒன்றினால் இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வேள்ட் விஷன் அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது.
பிளாஸ்ரிக் மீள்சுழற்சி நிலையம் இயங்க ஆரம்பித்தால் தென்மராட்சியில் பிளாஸ்ரிக் கழிவுகள் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.