சாவகச்சேரியில் சடலங்களை விடுவிக்கவும் இலஞ்சம்! தென்மராட்சி பொது அமைப்புக்கள் வைத்திய அதிகாரிக்கு எதிராக புகார்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி சடலங்களை ஒப்படைக்க இலஞ்சம் கோருவதாக மத்திய சுகாதார அமைச்சரிற்கு புகார் செய்யப்பட்டுள்ளது.தென்மராட்சியை சேர்ந்த பொது அமைப்புக்கள் இணைந்து இலங்கை சுகாதார அமைச்சரிற்கு கையளித்துள்ள புகாரின் பிரதிகள் இலங்கை ஜனாதிபதி முதல் பிரதமர்,வடமாகாண முதலமைச்சர் ஈறாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

77 பொது அமைப்புக்களது பிரதிநிதிகளது ஒப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இம்மகஜரினில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பினில் விரிவாக எடுத்து கூறப்பட்டுமுள்ளது.

இம்மகஜரில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் 60 கிராம அலுவலர் பிரிவுகளையும், 130 கிராமங்களையும், 22432 குடும்பங்களையும், 73089 வாழ்மக்களையும் மற்றும் 232.19 சதுரக்கிலோமீட்டர் நிலப்பரப்பையும் கொண்ட எமது தென்மராட்சி சாவகச்சேரி பகுதிக்கு 1932ம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை இயங்கிவரும் ஒரே ஒரு தள வைத்தியசாலையான சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பல திர்லியன் பெறுமதியான மூலதன, மூலவள இடுகைகளின் பின்னரும் ஒரே ஒரு காரணத்தால் மிகவும் சிக்கல்கள் நிறைந்த ஒரு காலப்பகுதியில் இன்று தனது சமூகம் நோக்கிய வழங்கலை வழங்கிவருகின்றது.

இந்தச் சூழலில் இதனை ஒரு சேவை என விழிப்பதற்குக் கூட அருகதையற்ற ஒரு விடயமாகவே நோக்கப்படுகின்றது. இதனை விட வருமானமீட்டும் தனியார்துறை வைத்தியசாலைகள் சிறந்தனவோ எனச் சிந்திக்க ஒருகணம் மனம் சஞ்சலப்படுகின்றது. அத்துனை விடயங்களும் உங்களது தீராத முயற்சியால் வாழ்வைப்பணயம்வைத்து எதிர்கால சமூகத்தை ஒரு நாகரீகம் மனிதநேயம் பண்பாடு நல்லொழுக்கம் மிக்கவர்களாக திகழவைப்பதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் காலப்பகுதியில் இடம்பெறுவதும் தொடர்வதும் நல்லாட்சி மீதான நம்பிக்கையிழப்பிற்கும் பரிபாலிப்பவர்களது புலமையீனத்தையும் வெளிக்காட்டும் ஒரு அடையாளச் சுட்டி என்பதனை நீங்கள் மறுக்கமுடியாது.

சம்பவங்களை, தவறுகளை, குற்றங்களை, துஸ்பிரயோகங்களை உரிய காலத்தில் உரிய முறைகளில் உரியவர்களுக்கு தெரியப்படுத்தாது மௌனம் காப்பது மிகப்பெரிய தவறாகும் என்பதனை நாங்கள் நன்கு அறிவோம். அது விடயம் தொடர்பில் எமது சமூகத்தின் பால் எமக்குள்ள அக்கறை நிமித்தம் அவற்றை நாங்கள் இழைப்பதற்கு தயாராகவில்லை. படிமுறை படிமுறைகளாக நாங்கள் நகர்ந்த நகர்வுகளில் எமக்கு உங்கள் மட்டத்தில் தான் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும் என்ற காரணத்தால் என்றும் மக்கள் சேவையை மகத்தாக ஆற்றும் உங்களிடம்…

சமூகத்தின் நோயாளி

கடந்த சில ஆண்டுகாலங்களாக சமூகத்திற்கு ஒரு சாபக்கேடான பிறவியே சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்கான பொறுப்புவைத்திய அதிகாரியாக இருந்து வருகின்றார். இவருக்கான இடமாற்ற கட்டளை 2016ம் ஆண்டு கிடைக்கப்பெற்றும் என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை ஒட்டுமொத்த எம்மக்கள் அனைவரது எதிர்ப்பிற்கும் மத்தியில் தொடர்ந்தும் இருந்து வருகின்றார். இவர் தொடர்பான அனைத்துவிபரங்களும் படிமுறை அலுவலகங்கள் திணைக்களங்களுக்கு தெரியப்படுத்தியும் “ஆம் எங்களுக்கு தெரிகின்றது” “எம்மால் உணரமுடிகின்றது” “தாங்கள் முற்கொணர்ந்த சம்பவங்களது உண்மைத்தன்மையை ஏற்றுக்கொள்கின்றோம்” என்ற பதில்கள் கிடைக்கின்றனவே தவிர சமூகத்திற்குச் சாதகமான எந்தவொரு தீர்வும் கிடைக்கவில்லை.

இவ்வாறான ஈனப் பிழைப்புவாதிகளை அரச நிர்வாக சூத்திரமும் அனுசரித்துத்தான் போகின்றதா? என சந்தேகிக்கவேண்டியுள்ளது. இனி உங்களுக்கும் தெரியட்டும் இவர் உண்மையில் ஒரு சமூகத்தின் நோயாளியே தான் என்பது.

பிணத்தோடும் பேரம்பேசும் பேராளன்

மிகமுக்கியமாக ஒரு மனிதனின் இறப்பில் அவனது குடும்பமும் சுற்றத்தவர்களும் அனுபவிக்கும் துயரம் இழப்பின் தவிப்பு நிச்சயம் உங்களுக்குத் தெரியும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் கூட வைத்தியசாலைப் பிரேத அறையிலிருந்து சடலத்தை வெளியே பெற்றுக்கொள்வதாயின் பொறுப்பு வைத்திய அதிகாரியான திரு குகதாசனிற்கு குறைந்தது 2000.00 மற்றும் பிரேதவறை தொழிலாளிக்கு குறைந்தபட்சம் ஒரு மதுபானப் போத்தலாவது வழங்காவிடின் அவ்விடம் விட்டு சடலமும் நகர்த்த முடியாது.

இது நிச்சயமான உண்மை. காப்புறுதிக் கொடுப்பனவுகள் பெறும் நோக்கில் விடுதியில் தங்கி எவ்விதநோய்க்கும் சிகிச்சை பெறாதவர்கள் கொடுப்பனவை பெறும்பொருட்டு வைத்தியசாலை அனுமதித்துண்டுக்கு அணுகும்பொழுது அதன் பெறுமதிக்கேற்ப கையூட்டல்களை மிகவும் இலாவகமாகப் பெற்றுக்கொள்கின்றார். இவ்வாறு பெறப்பட்ட இனாம் பொருட்களை பின்னர் வைத்திய சாலை மட்ட கருத்தமர்வுகள், செயலமர்வுகள், கூட்டங்கள் முதலியவற்றிற்கு விநியோகித்து அவற்றை நானாவித செலவீங்களாக திணைக்களத்திற்கு பற்றுச்சீட்டுகளை சமர்ப்பித்து பணமாக்கிக் கொள்கின்றார்.

ஒழிந்துவரும் சிறந்த மருத்துவம்

விசேட வைத்திய நிபுணர்கள் யாரும் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்கு வருகைதர மாட்டார்கள.; ஏன் சேவை மனப்பாங்குடைய எந்தவொரு வைத்தியராலும் இங்கே கடமைபுரிவது இயலாத காரியம். இது விடயம்தொடர்பில் இம் மருத்துவ மனையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச்சென்ற வைத்தியர்களிடம் நீங்கள் சுயாதீனமான ஒரு அறிக்கையை பெற்றுப்பாருங்கள். கடந்த காலங்களில் மிகச் சிறந்த சேவையாற்றி மக்கள் மனங்களை வென்ற வைத்தியர்கள் இவரால் மானபங்கப்படுத்தப்பட்டு இடமாற்றம் ஆகி சென்றுள்ளனர். அவ் வைத்தியர்களது விடுதிகளுக்கான மின்சார வழங்கலினை வைத்தியர்கள் இரவில் விடுதியில் தங்கும்பொழுது தனக்கு சார்பான சிற்றூழியர்கள் மூலம் தடைசெய்து மிகப்பெரும் சங்கட நிலைகளை உருவாக்கி அவர்களை அகற்ற முனைப்புக்கள் மேற்கொண்டவரலாறுகள் ஆதாரத்துடன் எம்மிடம் உள்ளது. இதனால் பாதிப்படைவதும் அசௌகரியமடைவதும் பிரதேச வாழ் மக்களாகிய நாமே. ஆகையால் தவறை சுட்டிக்காட்டும் சகல உரிமையும் எமக்கு உண்டு.

சமூகபொறுப்பிழந்து அதிகார துஸ்பிரயோகம்

அண்மையில் சாவகச்சேரி இந்துக்கல்லூரி மாணவன் ஒருவன் ஆசிரியரால் அறையப்பட்ட சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மீது அவருக்கு இருக்கும் காழ்ப்புணர்வு காரணமாக மாணவனின் உடல் நிலையில் உண்மைக்கு புறம்பான வகையில் மருத்துவ சிகிச்சை தொடர்பான அறிக்கையை காவல்துறைக்கு வழங்கி சம்பந்தப்பட்ட ஆசிரியரை நீதிமன்றுக்கு முன்னிலைப்படுத்தி தனது பொறுப்புக்களில் விலகி பாடசாலை குழம்புவதற்கான வழிவகைகளை உருவாக்கிக் கொடுத்த முக்கிய சூத்திரதாரி.

அம் மாணவனது உடல் நிலைத் தாக்கம் தொடர்பில் விசேட மருத்துவர்கள் மூலம் பின்னாட்களில் விசேட பரிசோதனைகள் நடாத்தப்பட்டு அம் மாணவனிற்கு எவ்வித உபாதைகளோ உடல் நலக் குறைபாடுகளோ இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. இது விடயம் தொடர்பில் தனது சமூகப்பொறுப்புகளிலிருந்து விடுபட்டும் தனது கடமையில் சமச்சீரின்மையை காட்டியும் தனது சொந்தப் பழி தீர்க்க பதவிஅதிகாரத்தை தவறாக பயன்படுத்தியும் நீதிமன்றுக்கு பொய்யான தகவலை வழங்கியும் தனது பதவி அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பொறுப்புக்கூறலிலிருக்கும் பொறுப்பற்ற தன்மை

எமது பிரதேச அபிவிருத்திகள் முன்னடைவுகள் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக பிரதேச செயலக மட்டத்தில் நடைபெறும் அபிவிருத்திக்கூட்டங்களுக்கு வருகைதருவது கிடையாது இதற்கு இவர் சார்ந்த திணைக்களங்களோ, இவரை நிர்வகிக்கும் நிர்வாக அலகுகளோ, எந்தவிதமான பொறுப்புக்கூறும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவில்லை. தனது கடமையில் இருந்து விடுபடுவதால் சாமானிய மக்களின் பல்வேறு தேவைகள் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தேனும் தீர்வுகளை பெற்றுக்கொள்ளமுடியாத சமூகத்திற்காய் சேவை வழங்காத துர்பாக்கிய நிலையை உருவாக்கிக்கொண்டு இருக்கின்றார்.

நோயாளர் காவா வண்டி (தருணத்திற்கு)

வைத்தியசாலைக்குரிய நோயாளர் காவு வண்டியை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்துவதால் நோயாளர்களது மேல் மருத்துவ நடவடிக்கைகளுக்காக உடனடியாக மாற்றம் செய்து கொள்வதில் தாமதநிலை ஏற்படுவதால் விலைமதிக்கமுடியாத உயிர்களின் முடிவுகள் ஊசலாடுகின்றன. 13.09.2016 அன்று பகல் ஒருமணிக்கு (13.00) விடுதியிலிருந்து வைத்திய கலாநிதி திரு மகாதேவா வினால் அவசர மேலதிக மருத்துவத் தேவைகளின் நிமித்தம் யாழ்போதனாவைத்திய சாலைக்கு அனுப்பும் வண்ணம் பணிக்கப்பட்டிருந்தும் குறித்த நோயாளர் மாலை ஏழு மணிக்கே (19.00) யாழ் போதனா வைத்திய சாலையில் உள்வாங்கப்பட்டிருக்கின்றார் (சாவகச்சேரி ஆதார வைத்திய சாலைக்கும் யாழ் போதனா வைத்திய சாலைக்கும் 15 நிமிடங்கள் மிகையான நேரமாக ஒருவழிப் பயணத்திற்குப் போதுமானதை கருத்திற்கொள்ளவும்) பெரும்பாலும் தனது வதிவிடத்திற்கு சென்றுவருவதற்கும் தனது குடும்பத்தினரின் அன்றாட கடமைகளை கவனிப்பதற்கும் தனது சொந்தப்பாவனைக்கு என அரசால் ஒதுக்கப்பட்ட வாகனம் போன்று பாவித்துவருகின்றார். நோயாளர்களுக்கான விசேட ஆசன ஏற்பாடுகளை தேவைக்கு களற்றிவிட்டு தேங்காயும் ஏற்றப்பட்டு வருகின்றது.

கடந்த நாட்களில் அன்றைய சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவால் வைத்தியசாலையின் புதிய கட்டடம் திறந்துவைக்கப்படமுன்னர் விசேட திட்டத்தில் கட்டட பிரதேசத்திற்கும் முன்பக்க பிரதான நுழைவாயிலிற்கும் மணல் மண் பரவப்பட்டது இதற்காக ஒதுக்கப்பட்டதில் சரிபாதி அளவானவை இவரது கனகம்புளியடி கல்வயல், சாவகச்சேரி எனும் பகுதியில் இருக்கும் காணியில் வைத்தியசாலையின் வேலைகள் ஒப்பந்தகாரரின் மூலம் கையாடல்செய்து விற்பனைசெய்துள்ளார் அக்காணியில் துப்புரவு மற்றும் இதர வேலைகளுக்கு வைத்திய சாலைப் பணியாளர்களையே பயன்படுத்துகின்றார் அவர்களுக்கான சாப்பாட்டு ஒழுங்குகள் கூட வைத்தியசாலையிலேயே இருந்து அனுப்பிவைக்கப்படுகின்றது.

அதற்கும் மேலாக சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இவரது மகனின் மதிய போசனம் வைத்தியசாலையாலேயே கவனிக்கப்படுகின்றது விசேடமாக இவரது வதிவிடமான உசன் மிருசுவில் பகுதியில் இவரது வீட்டில் வளர்க்கப்படும் உயர்ரக நாய்க்கான மாமிசங்கள் கூட வைத்தியசாலையிலிருந்தே செல்கின்றன. பாவம் விடுதிகளில் தங்கி மருத்துவம் பெறும் சாமானிய மக்கள் வீடுகளில் இருந்து பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியிலும் கடைகளில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் உணவைப் பெற்றுக்கொண்டிருக்கின்றனர்.

இலாவகமான கையூட்டல்

இவ் வைத்தியசாலைக்கு அருகில் தனியார் ஒருவரது சமையலறை எரிவாயுக் களஞ்சியசாலை அமைந்துள்ளது. வைத்திய சாலைக்கும் அக் களஞ்சிய சாலைக்கும் இடையில் 200 மீட்டர் தூரமும் இல்லை. அது இவ்விடத்தில் அமைப்பதற்கு எந்தவிதமான அருகதையுமற்றது நகரப்புறம் அண்மித்த வைத்தியசாலை போன்ற முக்கிய காரணிகளால் இவ்விடத்தில் அக்களஞ்சிய சாலையை வைத்திருக்க முடியாது இருந்தும் வைத்திய சாலை நிர்வாகம் அதற்கான எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது மாறாக உரிமையாளரிடம் பேரம்பேசி இவ்விடயம் தொடர்பில் எனது அழுத்தம் உங்களது களஞ்சிய ஸ்தலத்தின் அமைவிடத்தின் மீதும் உங்களது வியாபாரத்தின்மீதும் இடையூறு செலுத்தாது என ஒப்பந்தித்து ஒருதொகைப் பணத்தை கையூட்டலாகப் பெற்றுள்ளார். இவ் இரண்டு விடயங்களிற்கும் மிக முக்கியமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

சமூகத்தின் எதிர்பாப்பு

இது விடயம்தொடர்பில் உடனடியாகச் செயற்பட்டு இவ்விடயங்களுக்கு ஒரு நிலையான முற்றுப்புள்ளிவைத்து பொருத்தமான ஒரு வைத்திய அதிகாரியை நியமித்து எம்மக்களிற்கும் நீங்கள் நினைக்கும், நிகழ்த்தும் நல்லாட்சியின் வரப்பிரசாதங்கள் கிடைக்கும் என எதிர்பாப்பதுடன் நல்லாட்சி அரசாங்கத்தில் நல்லாட்சியின் பண்புகள் என்றும் நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையில் ஒட்டுமொத்த பிரதேச மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளாக நம்பிக்கையுடன் 77 பொது நலனோன்பு அமைப்புக்கள் ஒப்பமிடுகின்றோமென தெரிவித்து ஒப்பமிடப்பட்டுள்ளது.

Related Posts