யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி மல்லாகம் கோணப்புலம் நலன்புரி முகாமில் உள்ள மக்களைச் சந்தித்து அவர்களது குறைகள் தொடர்பில் நேரடியாக அறிந்து கொண்டார்.
ஐந்து நாள் விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
உயர்பாதுகாப்பு வலையமாக இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வலி.வடக்கு பிரதேச மக்களில் ஒரு பகுதியினர் மல்லாகம் நலன்புரி நிலையத்தில் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த 23 வருடங்களாக தமது சொந்த நிலங்களைவிட்டு வெளியேறிய மக்கள் பல்வேறு துன்பத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற நிலையில் ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதி சாலோகா பெயானி அவர்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களது பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டார்.
நேரடியாக மக்களது அவலங்களை அவதானித்த அவர் மக்கள் மத்தியில் தெரிவிக்கையில்,
என் மேல் நம்பிக்கை கொண்டு உங்கள் பிரச்சினைகளை தெரிவித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் . அத்துடன் இங்குள்ள நிலைமைகளை உங்களிடம் இருந்து அறிந்து கொள்ளவே இங்கு வந்துள்ளேன். இதுபோலத்தான் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் தென்சூடான் ஜோர்யியா போன்ற பல நாடுகளுக்கு சென்றுள்ளேன். அவர்களும் மிகவும் துன்பத்துடன் அனைவர் மீதும் கோபம் உடையவர்களாக வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் இவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு நீக்கி முன்னோக்கிச் செல்ல முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கே இலங்கை அரசினால் நான் அழைக்கப்பட்டுள்ளேன் .எனவே நான் விளங்கிக் கொண்டுள்ளேன் நீங்கள் 24 வருடமாக இடம்பெயர்ந்து வாழ்கின்ற நிலையினையும் அதில் பெரும்பாலானவர்கள் உங்களது சொந்த இடங்களில் வாழ ஆசைப்படுவதையும் அறிந்துள்ளேன். எனவே நான் உங்களது பிரச்சினைகளை தெரியப்படுத்துவேன். இதற்கு நல்ல தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்தார்.
இதேவேளை , குறித்த முகாம் மக்களுக்கு கடந்த 5 வருட காலமாக நிவாரணமோ எந்த உதவிகளோ வழங்கப்படவில்லை. பொருளாதார மற்றும் சுகாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால் வீடுகளிலும் வீதிகளிலும் இருக்க முடியாத நிலை காணப்படுகின்றது. 249 குடும்பங்களைக் கொண்ட குறித்த முகாமில் ஒரு வீட்டில் மாத்திரம் 3குடும்பங்கள் வாழ்கின்றனர். அத்துடன் 10 குடும்பங்களுக்கு 2 கழிப்பறை ஒரு தண்ணீர் பைப் என மிகுந்த சிரமத்துடன் வாழ்கின்றனர். இந்த நிலையில் தமது சொந்த நிலத்தை தவிர வேறு எந்த இடமும் வேண்டாம் என்பதில் மக்கள் மிகவும் உறுதியுடன் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.