சாலாவ முகாம் மீண்டும் புனரமைக்கப்படும்!

முற்றாக அழிவடைந்த நிலையிலுள்ள கொஸ்கம சாலாவ இராணுவ முகாம் மீண்டும் புனரமைப்பு செய்யப்படவுள்ளது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (15) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வெடிப்பு மற்றும் தீ விபத்து நடைபெற்றமைக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும். இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு தீ விபத்தினால் அழிவடைந்த 210 வீடுகள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 78 வீடுகளுக்கான புனர் நிர்மாணப் பணிகள் நடைபெற்ற வண்ணமுள்ளன.

இராணுவ முகாமைச் சுற்றியுள்ள 2 கிலோமீற்றர் வரையிலான பிரதேசங்கள் முழுவதும் புனர்நிர்மாண பணிகள் முடிவடைந்துள்ளன. தற்போது ஏனைய பணிகளே முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, அப்பிரதேசத்திலுள்ள 2 பாலர் பாடசாலைகள் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ளதுடன், இந்த பகுதியில் உள்ள வைத்தியசாலையும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

சாலாவ தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் தைத்து வழங்குவதற்கான ஏற்பாடுகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் 20 பாடசாலையைச் சேர்ந்த 1340 பாடசாலை மாணவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களையும் வழங்க தயாராகவுள்ளனர்.

அப்பகுதியிலுள்ள 1080 கிணறுகள் இவ் விபத்தினால் பாதிக்கப்பட்டதுடன், நீரும் அசுத்தமடைந்து காணப்பட்டது. அதன் பின்னர் சுகாதார வைத்திய அதிகாரிகளின் வழிகாட்டலில் அவைகளும் சுத்தம் செய்யப்பட்டு தற்போது மக்களின் பாவனைக்கு ஏற்றதாகவுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts