இலங்கை உள்ளிட்ட சார்க் உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் பொதுவான தொடர்பாடலுக்கான செய்மதி நேற்று(05) பிற்பகல் இந்தியாவிலிருந்து விண்ணில் ஏவப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
நேற்ற (05) பிற்பகல் அநுராதபுரத்திலுள்ள ஜனாதிபதி மாளிகையிலிருந்து செய்மதி தொழில்நுட்பத்தினூடாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் தொடர்பு கொண்ட ஜனாதிபதி சார்க் நாடுகளுக்கிடையில் ஒத்துழைப்பு, அபிவிருத்தி செயற்பாடுகளில் முன்னேற்றத்தை உருவாக்குவதற்காக செய்மதி ஏவப்பட்டமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க திருப்புமுனையாகும் என தெரிவித்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
சார்க் பிராந்திய நாடுகளுக்கிடையில் உறவுகளைப் பலப்படுத்துவதற்கான இந்திய பிரதமரின் அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி பாராட்டினார்.
தெற்காசிய தொடர்பாடல் செய்மதியென அறியப்படும் இச் செய்மதி ஆந்திர மானிலத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து இன்று பிற்பகல் 4.57 மணியளவில் ஏவப்பட்டது. இந்திய பிரதமரின் அனைவருக்கும் அபிவிருத்தி எனும் எண்ணக்கருவுக்கமைய 450 கோடி இந்திய ரூபா செலவினால் இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இச் செய்மதியின் மூலம் தெற்காசிய நாடுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பரிமாற்றிக்கொள்ளலாம். பரந்த தகவல் தொழில்நுட்ப தொடர்பாடல், தொலைக்கல்வி மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.
தெற்காசியப் பிராந்தியம் முழுவதும் வீச்செல்லையை கொண்டிருப்பதனால், அதன் தரப்பு நாடென்ற வகையில் இலங்கையின் உட்கட்மைப்பு வசதிகளின் அபிவிருத்தி செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க முடியுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், வறுமையிலிருந்து விடுபடுதல் மற்றும் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு இதன் மூலம் சிறந்த ஒத்துழைப்பு கிடைக்குமென நம்புவதாகவும் தெரிவித்தார்
.