சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழை பெறுவதற்காக வருபவர்களுக்கு துரித கதியில் சேவையை பெற்றுக் கொடுப்பாதற்காக அதிவேக ‘Fast Track System’ ஒன்றை ஆரம்பிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நுகேகொடையில் அமைந்துள்ள போக்குவரத்து மருத்துவ நிலையத்திற்கு முன்பாக மருத்துவச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வருபவர்கள் காலை முதல் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு தீர்வு காணும் வகையில் ‘Fast Track System’த்தை அறிமுகம் செய்யுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தில் சாரதிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி சான்றிதழ் வழங்குவதன் மூலம் 2019ஆம் ஆண்டு 200மில்லியன் ரூபாய் வருமானத்தை அமைச்சு திறைசேரிக்கு பெற்றுக் கொடுத்துள்ளது. 2019ஆம் ஆண்டு அந்நிறுவனத்தால் பெற்றுக் கொள்ளப்பட்ட மொத்த வருமானம் 712மில்லியன் ரூபாய்களாகும். இதன் மூலம் 300மில்லியன் ரூபாய் தேறிய இலாபமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான மருத்துவச் சான்றிதழைப் பெறுவதற்காக நாள்தோறும் சுமார் 800 பேர் வரையில் நுகேகொடையிலுள்ள மருத்துவ நிலையத்துக்கு வருகை தருவதாகவும் அவர்களுக்கு சிறப்பான சேவையை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார். நேற்றுக் காலை நுகேகொடையிலுள்ள போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு நேரில் சென்ற அமைச்சர் அங்குள்ள நிலைமைகளை நேரில் கண்டதன் பின்னரே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மேற்கண்டவாறு பணிப்புரை விடுத்தார்.