விக்ரம் நடித்து கடந்த வாரம் வெளிவந்துள்ள ‘இருமுகன்’ படம் வியாபார ரீதியாக எவ்வளவு வசூல் செய்தது என்பது பற்றி படத்தை வெளியிட்டுள்ள வினியோக நிறுவனமான ஆரா சினிமாசின் மகேஷ் சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். படத்தை வெளியிட்டவரே அதன் வசூலைப் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு அந்தப் படத்தின் வசூலைப் பற்றி மற்றவர்கள் ஏற்றியோ, இறக்கியோ சொல்ல முடியாது. வசூல் ரீதியாக அந்தப் படம் வெற்றி என்பது படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சிதான் என்றாலும் மறுபக்கம் கொஞ்சம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். அதற்குக் காரணம் இருக்கிறது.
விக்ரம் – ஹரி நீ…..ண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைய உள்ள ‘சாமி 2’ படத்தை ‘இருமுகன்’ படத்தைத் தயாரித்த ஷிபு தமீன்ஸ்தான் தயாரிக்க உள்ளார். ‘இருமுகன்’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதால் அதிக மகிழ்ச்சியில் உள்ளது விக்ரம் தான். ஏனென்றால் இதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் பத்து காட்சிகள் கூட ஹவுஸ்ஃபுல்லாக போகாமல் படுதோல்வி அடைந்தது. அவருடைய மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அவருக்கு அடுத்த வெற்றி என்பது கட்டாயாக தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. இதை ‘இருமுகன்’ இனிமையாகக் கொடுத்துவிட்டது.
எனவே, ‘இருமுகன்’ வெற்றியைக் காரணமாக வைத்து ‘சாமி 2’ படத்திற்காக சம்பளத்தை சில பல கோடிகள் அதிகப்படுத்திவிட்டாராம். விஜய் நடித்த ‘புலி’ பட தோல்விக்கே பயப்படாத ஷிபு தமீன்ஸ் விக்ரமை நம்பி ‘இருமுகன்’ படத்திற்கு 40 கோடி வரை செலவு செய்தார் என்கிறார்கள். அப்படியிருக்கும் போது 2003ன் மாபெரும் வெற்றிப் படமான ‘சாமி’ கூட்டணி 13 வருடங்கள் கழித்து ‘சாமி 2’ படத்தில் இணையும் போது விக்ரம் சம்பளத்தைப் பற்றி யோசிப்பாரா என்ன ?. விக்ரம் கேட்ட சம்பளத்தைக் கொடுக்க அவரும் சரி என்றே சொல்லிவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.