சாமி வெற்றிக் கூட்டணி உடைந்தது!!

ஹரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், த்ரிஷா, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடிக்க 2003ம் ஆண்டு வெளிவந்த ‘சாமி’ படம் மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பரபரப்பான ஆக்ஷன் ஒரு காரணமாக இருந்தாலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இடம் பெற்ற பாடல்களும் முக்கிய காரணமாக இருந்தது.

படத்தில் இடம் பெற்ற ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா’ பாடல் சர்ச்சைக்குரிய பாடலாக அமைந்து பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அப்போது அந்தப் பாடலை விமர்சிக்காதவர்களே இல்லை. இருந்தாலும் அந்தப் பாடல் பெரிய ஹிட்டாகி படத்திற்கே ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. மேலும் படத்தில் இடம் பெற்ற மற்ற பாடல்களான ‘திருவெல்வேலி அல்வாடா, இதுதானா, ஐயய்யோ புடிச்சிருக்கு, வேப்பமரம்” ஆகிய பாடல்கள் அனைத்துமே கமர்ஷியலாக அமைந்து படத்திற்கு பக்கபலமாக அமைந்தன.

அதன் பின் ஹரி இயக்கத்தில் வெளிவந்த “கோவில், அருள், சி 3” ஆகிய படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்போது ஹரி – விக்ரம் – த்ரிஷா 14 வருடங்கள் கழித்து ‘சாமி’ இரண்டாம் பாகம் மூலம் மீண்டும் இணைய உள்ள படத்தில் அந்தக் கூட்டணியின் மற்றொருவரான ஹாரிஸ் இடம் பிடிக்கவில்லை. அவருக்குப் பதிலாக தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஹரியும், தேவி ஸ்ரீ பிரசாத்தும் கடைசியாக இணைந்து பணி புரிந்த ‘சிங்கம் 2’ படம் தோல்வியடைந்த போது, அதற்கு பாடல்கள் சரியாக இல்லாதது ஒரு காரணம் என்றார்கள். சமீபத்தில் வெளிவந்த ‘சிங்கம் 3’ படம் தோல்விக்கும் காரணம் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் தேறவில்லை என்றார்கள். அப்படியிருக்க மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஹரி ஒப்பந்தம் செய்திருப்பதன் காரணம் புரியாத புதிராகவே உள்ளது.

Related Posts